வருமானத்துக்கு அதிகமாக முன்னாள் அமைச்சர் - ராஜேந்திர பாலாஜி 73% சொத்து சேர்ப்பு : உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை தகவல்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்தது தெரியவந்துள்ளதால், மேல்விசாரணை நடந்து வருகிறது.ஆரம்பகட்ட விசாரணையின்போது வழக்கை கைவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக ரூ.7 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

3-வது நீதிபதி விசாரணை

2 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி சத்தியநாராயணனும், வழக்கு பதிவு செய்வதால் எந்த பயனும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஹேமலதாவும் இரு வேறு தீர்ப்புகளை அளித்தனர். இதனால், 3-வது நீதிபதியாக நிர்மல்குமார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.

இந்த வழக்கில், ராஜேந்திர பாலாஜி தரப்பில் வாதம் முடிந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு துறைசார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா நேற்று ஆஜராகி வாதிட்டார். அவர் கூறியதாவது:

ராஜேந்திர பாலாஜி வருமானத்தில் 10 சதவீதத்துக்கும் குறைவாக சொத்து சேர்த்ததாக கூறி வழக்கை கைவிட முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் அளவுக்கு அவர் சொத்து சேர்த்தது தெரியவந்துள்ளது.

புகார் குறித்த விசாரணை ஆரம்பகட்ட நிலையில் உள்ளது. மேல் விசாரணையும் தற்போது தொடங்கியுள்ளது. ஆரம்பகட்ட விசாரணையின்போது வழக்கை கைவிட முடியாது. முழுமையான நீதிமன்ற விசாரணைக்கு பிறகே, அதுபற்றி முடிவு செய்ய இயலும். இறுதி அறிக்கை தாக்கல் செய்த பிறகுகூட, மேல் விசாரணை நடத்தலாம் என்று உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளிக்கவும், எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்யவும் ராஜேந்திர பாலாஜி தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி நிர்மல்குமார், வழக்கு விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேல் விசாரணையும் தொடங்கியுள்ளது. ஆரம்பகட்ட விசாரணையின்போது வழக்கை கைவிட முடியாது. முழு நீதிமன்ற விசாரணைக்கு பிறகே, அதுபற்றி முடிவு செய்ய இயலும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE