கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எஸ்டேட் மேலாளரிடம் போலீஸார் விசாரணை :

By செய்திப்பிரிவு

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான போலீஸார், இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்மற்றும் பங்களாவுக்குள் கடந்த2017 ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளைவழக்கில் சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேரை கோத்தகிரி போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், கோடநாடு எஸ்டேட் வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கோடநாடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர்கள் மனு அளித்தனர். இதையடுத்து சயான் மற்றும் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் போலீஸார் மறு விசாரணை நடத்தினர். நேற்றுமுன்தினம் உதகை நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது, கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆஜராகவில்லை. அரசு வழக்கறிஞர்கள் கால அவகாசம் கோரியதால் அக்டோபர் 1-ம் தேதிக்குவழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த, மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உத்தரவின்பேரில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர், ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உதகையில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பழைய அலுவலகத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு, தனது வக்கீல் ராஜ்குமாருடன், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆஜரானார். ஐஜி சுதாகர்தலைமையில் போலீஸார், அவரிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினர். மதியம் 1 மணிக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் எதுவும் கூறாமல் சென்றுவிட்டார். அவரது வழக்கறிஞர் ராஜ்குமார், ‘‘உங்களை பின்னர்சந்திக்கிறேன்’’ எனக்கூறி சென்றார்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது ‘‘கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம், எஸ்டேட்பங்களாவில் எந்தெந்த பொருட்கள் காணாமல் போயுள்ளன. சம்பவத்தின்போது கண்காணிப்பு கேமராக்கள் ஏன் வேலை செய்யவில்லை? கேமரா பதிவுகளை யார் கையாள்வது? கணினி ஊழியர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் ஆகியவை தொடர்பாக விசாரித்தோம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்