செஞ்சி அருகே குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயின் நண்பரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மணலபாடி மதுரா மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன்(37). இவரது மனைவி துளசி(23). இவர்களுக்கு 4, 2 வயதில் மகன்கள் உள்ளனர். துளசி தனது இளைய மகனை கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளியில் உள்ள தாய் வீட்டில் இருந்த துளசியை ஆக.29-ம் தேதி செஞ்சி அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் துளசிக்கும், பிரேம்குமார் என்கிற மணிகண்டன்(30) என்பவருக்கும் நட்பு இருந்து வந்தது தெரியவந்தது. துளசியின் இளைய மகன், அவனது தந்தையின் முகஜாடையில் இருப்பதால், அவனை அடித்து துன்புறுத்தி, அதை வீடியோ எடுத்து அனுப்பும்படி பிரேம்குமார் கூறியதாக தெரிகிறது. அதன்படி, துளசி தனது இளைய மகனை தாக்கி வீடியோ எடுத்து பிரேம்குமாருக்கு அனுப்பிஉள்ளார் என்பது தெரியவந்தது.
அதன் பின்பு, தனிப்படையினர் நடத்திய விசாரணையில், பிரேம்குமார் புதுக்கோட்டை மச்சுவாடிபாலன் நகரைச் சேர்ந்தவர் என்பதும், அவர் அங்கு உள்ள மிட்டாய் கடையில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்லுசந்து பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பிரேம் குமாரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago