நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஓரிரு நாட்களில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சி பகுதியில் ரூ.54.27 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திருச்சியில் தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் நகர்ப் புறங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், முதல்வரின் உத்தரவின்பேரில், நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் மாநிலத்தில் ஆண்டு முழுவதும் குடிநீர் ஆதாரம் உள்ள இடங்களில் ஜல் ஜீவன் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
1976-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கட்டப்பட்ட திருச்சி காவிரிப் பாலம் கடந்த ஆட்சியில் முறையாக சீரமைப்பு செய்யப்படாததால், தற்போது வலுவிழந்துள்ளது. எனவே, தற்போதுள்ள பாலத்துக்கு அருகில் ரூ.80 கோடியில் புதிய பாலம் கட்டப்படும்.
மாநகராட்சியுடன் இணைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது பதவியில் உள்ளவர்கள் தங்கள் பதவிக் காலம் முடியும் வரை அந்தப் பதவியில் நீடிப்பார்கள்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த அட்டவணை தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எந்த தேதியில் தேர்தலை நடத்தலாம் என்பது குறித்து துறை செயலாளர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதனடிப்படையில், இன்னும் ஓரிரு நாட்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago