கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் - போலீஸார் அறிக்கை தாக்கல் செய்யவில்லை : செப்டம்பர் 2-க்கு வழக்கு தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை உதகை நீதிமன்றத்தில் செப். 2-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப். 23-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம் பகதூரை கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

இந்த கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரை காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் உள்ளனர். வாளையாறு மனோஜுக்கு யாரும் உத்தரவாதம் அளிக்காததால் அவர் குன்னூர் கிளை சிறையில் உள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கில் திருப்புமுனையாக காவல்துறையினர் சயான் மற்றும் உயிர்இழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் மறு விசாரணை மேற்கொண்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணை அறிக்கை, கோடநாடு வழக்கு விசாரணையின்போது தாக்கல் செய்யப்படும் என போலீஸார் தெரிவித்தனர். இதனால், அனைவரும் இந்த வழக்கு விசாரணைக்காக எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சயான் மட்டுமே ஆஜராகியிருந்தார். வாளையாறு மனோஜை போலீஸார் ஆஜர்படுத்தவில்லை. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆஜராகினர். சாட்சி சார்பில் வழக்கறிஞர்கள் ஆனந்தகிருஷ்ணன், டி.கே.தேவராஜ், என்.சுரேஷ்குமார், சந்தோஷ்குமார் ஆஜராகினர்.

விசாரணை தொடங்கியதும், அரசு வழக்கறிஞர்கள் ‘புலன் விசாரணை நடத்தப்பட்டு வருவதால், அறிக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம் தேவை’ என்றனர்.

சாட்சி அனுபவம் ரவி சார்பில்ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தகிருஷ்ணன், ‘தன்னிடம் மறு விசாரணை செய்யக் கூடாது என தடை கோரி உயர் நீதிமன்றத்தில் அனுபவம் ரவி மேல்முறையீடு செய்துள்ளார். எனவே, அந்த மனுமீதான தீர்ப்பு வரும் வரை விசாரணை நடத்த கூடாது’ என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிசஞ்சய் பாபா, அடுத்த விசாரணையை செப்.2-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து அரசு வழக்கறிஞர் ஷாஜகான் கூறும்போது, ‘போலீஸார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்ததும் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதற்கு காலஅவகாசம் தேவை எனக் கோரினோம்.

நீதிபதி விசாரணையை செப்.2-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். அன்றைய தினம் முதல் சாட்சிகளான கோடநாடு மேலாளர் நடராஜன், தடயவியல் நிபுணர் ராஜ்மோகன், மின்சார வாரிய கோத்தகிரி உதவிப் பொறியாளர் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கும்’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்