கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.50 உயர்வு - மத்திய அரசின் அறிவிப்பு ஏமாற்றம் தருவதாக டெல்டா விவசாயிகள் வேதனை :

By செய்திப்பிரிவு

கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.50 உயர்த்தி 2,900 ஆக வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால் கரும்பு விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டகாவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுந்தர விமல்நாதன் கூறியதாவது:

மத்திய அரசு கரும்புக்கு நேற்று அறிவித்த நியாயமான மற்றும் லாபகரமான விலை, நியாயமற்றதாக இருக்கிறது. கடந்த ஆண்டு கரும்புக்கு நியாயமான மற்றும் லாபகரமான விலை டன்னுக்கு ரூ.2,850 என அறிவிக்கப்பட்டது. தற்போது, இதைவிட ரூ.50 மட்டுமே உயர்த்தி டன்னுக்கு ரூ.2,900 என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்வு, விவசாயத் தொழிலாளர்களின் கூலிஉள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றைஎல்லாம் கருத்தில் கொள்ளாமல்விலையை அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

பிழிதிறன் 10 சதவீதம்

இந்த விலையும் 10 சதவீதம் பிழிதிறன் கொண்ட கரும்புக்கு மட்டுமே கிடைக்கும். இந்த அறிவிப்பின்படி, தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு 9 சதவீத பிழிதிறன் மட்டுமே இருப்பதால், அதன் அடிப்படையில் டன்னுக்கு ரூ.2,750 மட்டுமே கிடைக்கும்.

கரோனா காலத்தில் உற்பத்தி செலவு, இடைநிலை செலவு உள்ளிட்டவை அதிகமாகவுள்ள நிலையில், இந்த விலை அறிவிப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. எனவே, இதை மறுபரிசீலனை செய்து, மீண்டும் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வஞ்சிக்கிறது மத்திய அரசு

இது குறித்து, அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கச் செயலாளர் பி.கோவிந்தராஜ் கூறியதாவது:

கரும்புக்கான உற்பத்தி செலவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,500 விலை வழங்க வேண்டும் என கேட்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.50 மட்டுமே உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளதால், கரும்பு விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

விவசாயிகளின் விளை பொருட்களுக்கான விலை அறிவிப்பில், மத்திய அரசால் விவசாயிகள் வஞ்சிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்