கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மேல்விசாரணை நடத்த தடை கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஆக.27-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீஸார் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு தடை விதிக்கக் கோரி இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக உள்ள கோவையைச் சேர்ந்த நகை வியாபாரியும், கோவை மாநகர அதிமுக அம்மா பேரவை இணைச் செயலாளருமான ரவி என்ற அனுபவ் ரவி (52), சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஐ.சுப்ரமணியம், ஏ.எல்.சோமையாஜி ஆகியோர் ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் மேல்விசாரணை நடத்துவதாக நீலகிரி நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர். அதுதொடர்பாக சாட்சிகள் யாரிடமும் தெரிவிக்கவில்லை. குற்றம்சாட்டப்பட்ட சிலரிடம் மட்டும் தெரிவித்துவிட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மறுநாள் முதல் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து வருகின்றனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கிய பிறகு குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் மீண்டும் மறுவிசாரணை நடத்த முடியாது. நீதிமன்றத்தின் அனுமதியின்றி இந்த வழக்கின் முக்கிய நபரான சயானிடம் போலீஸார் மீண்டும் மறு விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுதான் மறுவிசாரணை நடந்து வருவதாக சட்டப்பேரவையில் முதல்வர் தவறான தகவலை அளித்துள்ளார்’’ என குற்றம்சாட்டினர்.
அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் வாதிடும்போது, ‘‘கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களை முழுமையாக கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது காவல்துறையின் கடமை. அந்த நோக்கில்தான் இந்த வழக்கின் விசாரணையை விரிவுபடுத்துவதற்காக நீலகிரி நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர். அது நிராகரிக்கப்படவில்லை.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிலரும் மேல்விசாரணை மேற்கொள்ள வேண்டுமென நீதிபதியிடம் கடிதம் கொடுத்துள்ளனர். முக்கிய நபர்களை சாட்சிகளாக விசாரிக்க வேண்டுமென குற்றம்சாட்டப்பட்ட சிலர் உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளனர். மனுதாரர் அரசு தரப்புசாட்சியம் மட்டுமல்ல, குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் நெருக்கமானவர். கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்தில் தொடர்புடையவர்களையும் இதுவரை விசாரிக்கவில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் திடீரென விபத்தில் சிக்கி மர்மமான முறையில் அடுத்தடுத்து இறந்துள்ளனர். அதுகுறித்து முழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளது. அதுதொடர்பான விசாரணைக்கு அழைத்துள்ளதால் மனுதாரர் தற்போது விசாரணைக்கு தடை கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். வேண்டுமென்றால் அவர் தனது வழக்கறிஞர் துணையுடன் போலீஸார் முன்பாக ஆஜராகி விளக்கமளிக்கலாம்’’ என்றனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘இவ்வாறு விசாரணையை நீட்டித்துக்கொண்டே சென்றால் எப்போதுதான் இறுதி அறிக்கை தாக்கல் செய்வது’’ என கேள்விஎழுப்பினார். அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர், ‘‘தேவையில்லாமல் யாரையும் துன்புறுத்த வேண்டுமென்ற நோக்கில் இந்த விசாரணை நடத்தப்படவில்லை. இந்த விசாரணையை முடிக்க 8 வார காலம் அவகாசம் தேவை’’ என்றார். அதையடுத்து மனு மீதான தீர்ப்பை நீதிபதி எம்.நிர்மல்குமார் ஆக.27-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
இதற்கிடையே, முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபாலை விசாரணைக்கு ஆஜராகுமாறு, கோத்தகிரி காவல்துறையினர் சம்மன்அனுப்பியிருந்தனர். நீலகிரிமாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஆசிஸ் ராவத் முன்னிலையில் நேற்று ஆஜரான தனபாலிடம், போலீஸார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அதன்பின் வெளியே வந்த தனபால் செய்தியாளர்களை நோக்கி, ‘‘முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு, கோடநாடு வழக்கில் தொடர்பிருப்பதாக எனக்கு சந்தேகம் இருப்பதால் அவரிடம் விசாரிக்க வேண்டும் எனக் கூறினேன். எனது வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்து கொண்டனர்’’ என கூறியபடியே சென்றார்.
தனபாலிடம் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை, கோடநாடு வழக்கு விசாரணைக்கு வரும்27-ம் தேதி, உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்படும் என போலீஸார் தெரிவித்தனர். கடந்த வாரம் உதகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பழைய அலுவலகத்தில் நடந்த விசாரணையில், வழக்கில் தொடர்புடைய சயான் ஆஜரானார். அவரிடம், ஆஷிஸ் ராவத் 3 மணி நேரம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago