- விழுப்புரத்தில் திருமண விழாவுக்கு அமைச்சரை வரவேற்று - திமுக கொடிக்கம்பம் நட முயன்ற பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் திருமண விழாவில் அமைச்சரை வரவேற்பதற்காக திமுக கொடிக் கம்பம் நட முயன்ற பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

விழுப்புரம் அருகே நன்னாடு கிராமத்தில் அப்பகுதி திமுக நிர்வாகி ஒருவரின் குடும்பத் திருமண விழா நடைபெற்றது. இதற்காக கடந்த 20-ம் தேதி விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்துக்கு செல்லும் சாலையில் திமுக கொடிகள் கட்டப்பட்டன. இதற்கான இரும்பு கம்பங்களை நடும்போது, கொடிக் கம்பத்தில் ஒன்று அவ்வழியாகச் சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உரசியது.

கொடிக் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த விழுப்புரம், ரஹீம் லே அவுட் பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் மகன் தினேஷ்(12) என்றச் சிறுவன் மின்சாரம் தாக்கிசம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சிறுவன், விழுப்புரம் அரசுஉயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்புபடித்து வந்தார். கரோனா ஊரடங்கு விடுமுறை காரணமாக வீட்டில் இருந்து வந்த அவர், இப்பணிக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சிறுவன் இறந்தது தொடர்பாக ஏகாம்பரம் மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் (IPC 174) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்விவகாரம் குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று முன்தினம் தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “கட்சி நிர்வாகியின் குடும்ப திருமண விழாவுக்கு திமுக கொடிக் கம்பம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். சிறுவனை பணிக்கு அழைத்து வந்த ஒப்பந்ததாரர், இறந்த சிறுவனின் குடும்பத்தாரிடம் ரூ.1.50 லட்சம் வழங்கியுள்ளார்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக நேற்று பேசிய அமைச்சர் பொன்முடி “அந்த திருமணத்துக்கு தான்செல்லவில்லை” என்றார்.

“இப்பகுதியில் கம்பம் நடவோ, பேனர் வைக்கவோ எவ்வித அனுமதியும் கொடுக்கவில்லை. வட்டாட்சியரிடம் அறிக்கை கேட்டுள்ளேன். அறிக்கை கிடைக்கப்பெற்ற பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஹரிதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் தொழிலாளர் நலத்துறை அலுவலர் சார்லஸிடம் இதுபற்றி கேட்டபோது, “இளஞ் சிறார்களை இதுபோன்ற பணியில் அமர்த்துவது சட்டப்படி தவறு, போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்போது, இறந்த சிறுவனின் பள்ளி மாற்றுச் சான்றிதழை இணைக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “முதலில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான, சந்தேக மரணம் என்ற பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர் விசாரணைக்கு பின்பு குற்றப்பிரிவு மாற்றம் செய்யப்படும்” என்றனர்.

உயிரிழந்த சிறுவன் தினேஷின் தாயார் லட்சுமியை தொடர்பு கொண்டபோது, தான் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளர் துரையிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று முடித்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து துரையிடம் கேட்டபோது, “சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க என் உதவியை கேட்டார்கள். அதற்கு உதவினேன். அந்த சிறுவனை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர்தான் வேலைக்கு அழைத்து சென்றதாக கூறுகிறார்கள். மற்றபடி வேறு எதுவும் தனக்கு தெரியாது” என்றார்.

விழாக்களுக்கு பேனர் வைக்க வேண்டுமென்றால் தடையின்மை சான்று பெற்று, அதனுடன் அரசுநிர்ணயித்த தொகையை கருவூலத்தில் செலுத்தி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும் என்பது விதி. ஆனால் இதனை அரசியல் கட்சியினர், பெரும்பாலான வணிக நிறுவனங்கள், தனி நபர்கள் யாரும் பின்பற்றுவதில்லை. இதை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை.

கரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால், அடிதட்டு மக்களின் குழந்தைகள் கூலி வேலைகளுக்கு செல்ல தொடங்கி விட்டனர். அவர்களை குறைந்த ஊதியம் கொடுத்து இப்படிப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்ததாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த 2019 செப்டம்பரில் சென்னையில் சுப, கோவையில் ஒரு பெண் ஆகியோர் கொடிக் கம்பம், பேனர் சாய்ந்து உயிரிழந்தனர். அப்போது பெரும்பாலான கட்சியினர் அந்த சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தற்போது, விழுப்புரம் மாணவர் உயிரிழந்த சம்பவத்துக்கு பாஜக, மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

விளிம்பு நிலையில் உள்ள

குடும்பத்துக்கு ஏற்பட்ட சோகம்

உயிரிழந்த பள்ளி மாணவர் தினேஷின் தந்தை ஏகாம்பரம் சற்றே மனநிலை சரியில்லாதவர், தாயார் லட்சுமி, மூத்த சகோதரி ஆகிய இருவரும் தனியார் நிறுவனத்திலும், மூத்த சகோதரர் ஹோட்டல் ஒன்றிலும் பணியாற்றுகின்றனர். வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். விளிம்பு நிலையில் வாழும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த தினேஷ், தன்னால் முடிந்ததை ஈட்டித் தர வேண்டும் என்ற எண்ணத்தில் கொடிக் கம்பம் நடும் பணிக்கு சென்றபோதுதான் இந்த துயர சம்பவம் நேர்ந்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்