தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்குப் போடுவதாகப் புகார் தெரிவித்து, அதிமுக எம்எல்ஏ-க்கள் நேற்று பட்ஜெட் உரையைப் புறக்கணித்து, வெளிநடப்பு செய்தனர்.
தமிழக அரசின் திருத்திய நிதிநிலை அறிக்கையை சென்னை கலைவாணர் அரங்கில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். காலை 10.06 மணிக்கு அமைச்சர் உரையைத் தொடங்கியபோது, எதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிசாமி எழுந்து, பேச வாய்ப்பளிக்குமாறு கேட்டார். தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏ-க்களும் எழுந்து நின்று, பேச வாய்ப்பு தரும்படி கூறினர்.
ஆனால், அவர்கள் பேசுவதற்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாய்ப்பு அளிக்கவில்லை. "பட்ஜெட் மீதான விவாதத்தில் உங்கள் கருத்துகளைக் கூறலாம்" என்று தெரிவித்து, அமைச்சரை தொடர்ந்து பேசுமாறு கூறினார்.
இதையடுத்து, கே.பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனால், அதிமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்யவில்லை.
பின்னர், எதிர்க் கட்சித் தலைவர் கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தலின்போது 505-க்கும் மேற்பட்ட, நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளைக் கூறி திமுகவினர் ஆட்சிக்குவந்தனர். ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்தே நீட்தேர்வு ரத்து என்று முதல்வர் தெரிவித்தார். ஆனால் 100 நாட்களாகியும் இதற்குத் தீர்வு காணப்படவில்லை.
வெள்ளை அறிக்கை என்று கூறி, வெற்றுஅறிக்கையை வெளியிட்டனர். அதில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளனர். வெள்ளை அறிக்கை வெறும் விளம்பரம்தேடும் முயற்சிதான். `ஊதாரித்தனமாக செலவுசெய்த முன்னாள் அரசு' என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சித்த நிதியமைச்சரைக் கண்டிக்கிறோம்.
அதேபோல, பழிவாங்கும் நோக்குடன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போடுவதையும் கண்டிக்கிறோம். கடந்த 9-ம்தேதி காவல் துறையினர் `நமது அம்மா' அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளேநுழைந்து, சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது. இதுபோல பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் திமுக அரசைக் கண்டித்து, பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்கிறோம்.
திமுக பொறுப்பேற்று 100 நாட்களில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் தொடங்கிய திட்டங்களைத்தான் இவர்கள் மீண்டும் தொடங்கிவைக்கின்றனர். இவ்வாறு கே.பழனிசாமி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago