திருவண்ணாமலை அருகே லாரி மீது கார் மோதி - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு : 4 பேர் படுகாயம்; காயமின்றி உயிர் பிழைத்த சிறுவன்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம், சந்தவாசல் அருகே நேற்று நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். காயமின்றி மூன்றரை வயதுசிறுவன் உயிர் பிழைத்துள்ளார்.

வேலூர் விருப்பாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (55). இவர்,தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 10 பேருடன், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் புதுப்பாளையம் அடுத்த புதூர் மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று பிற்பகல் காரில் புறப்பட்டார். காரை, அவரதுமகன் சசிகுமார்(25) ஓட்டினார்.

சந்தவாசல் அருகே கடலூர் – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முனிவந்தாங்கல் கூட்டுச் சாலையில் கார் சென்றபோது, காரின் பின்பக்க டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், எதிரே வந்த லாரி மீது மோதியது. லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று கிராமமக்களுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதில் குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடினர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம், வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேநேரத்தில் காயமின்றி ஒரு சிறுவன் உயிர் பிழைத்துள்ளார்.

இதையடுத்து உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் விவரம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் மூர்த்தி(55), அவரது தாயார் முனியம்மாள்(73), மருமகளான சசிகுமார் மனைவி பரிமளா(19), அவரது 3 மாத பெண் குழந்தை நிஷா, சோழவரத்தில் வசிக்கும் சுதாகர் மனைவியும், மூர்த்தியின் மகளுமான கோமதி(26), உறவினர்ராதிகா(45) ஆகியோர் உயிரிழந்தது உறுதியானது. மேலும், மூர்த்தியின் மனைவி கலா (50), மகன் சசிகுமார்(25), மூர்த்தியின் தம்பி மகள் பூர்ணிமா(21), உறவினர் மாலதி(40) ஆகியோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் காயமின்றி உயிர் தப்பிய கோமதியின் மூன்றரை வயது மகன் குமரனை, அவரது தந்தை சுதாகரிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

இந்த விபத்து குறித்து ஆரணிகோட்டாட்சியர் கவிதா தலைமையிலான வருவாய்த் துறையினர் நேரில் சென்று விசாரித்தனர். உயிரிழந்த 6 பேரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக, ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இது குறித்து சந்தவாசல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE