போக்குவரத்து துறை இழப்பில் இருந்தாலும் - மக்கள் நலன் கருதி பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது : அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி

By செய்திப்பிரிவு

போக்குவரத்து துறை இழப்பில்இருந்தாலும், பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மேற்கு சைதாப்பேட்டை, கிழக்கு சைதாப்பேட்டை பகுதிகளில் இருந்து 18 வழித்தடங்களில் 23 மாநகர பேருந்துகள், சிறிய பேருந்துகளின் சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சைதாப்பேட்டையில் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது:

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கையில், மின்வாரியமும், போக்குவரத்து துறையும் அதிக அளவில்நஷ்டத்தில் இயங்கி வருவதைபார்த்திருப்பீர்கள். போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்கினாலும் மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, பெண்கள், மாற்றுத் திறனாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு சாதாரணக் கட்டண பேருந்துகளில் இலவசபயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டம் தொடங்கியது முதல்இதுவரை 9.47 கோடி பேர் பயணம்செய்துள்ளனர். பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை.

கும்மிடிப்பூண்டியில் உள்ள குடிநீர் (அம்மா குடிநீர்) சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தோம். அருகில் உள்ள 23 கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் மனுஅளித்துள்ளனர். இதுதொடர்பான ஆய்வு அறிக்கை பெறப்பட்டவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் 2,500 பேருந்துகள் புதிதாக வாங்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம், தொமுச பொருளாளர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்