ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் கொண்டாட்டம் - தமிழக அரசின் அறிவிப்புக்கு ஆளுநர் தமிழிசை மகிழ்ச்சி :

By செய்திப்பிரிவு

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநராகவும் உள்ளார். தெலங்கானா சென்று அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு, தற்போது டெல்லியில் தெலங்கானா பவனில் உள்ளார். அங்கு அவரை மத்திய மீன்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருக்கு ஆளுநர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தமிழிசை நேற்று இணையத்தில் வெளியிட்ட தகவலில், ‘‘மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை அரசு விழாவாகக் கொண்டாட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. 2016-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநில அரசு அங்குள்ள துறைமுகத்துக்கு நம் தமிழ் மன்னரான ராஜேந்திர சோழனின் பெயரைச் சூட்டி, அவரது உருவப்படத்தை திறந்து வைத்து பெருமை சேர்த்தது. அதேபோல, மும்பையில் இருந்து லண்டன் செல்லும் அரசின் ஏர் இந்தியா போயிங்-747 விமானத்துக்கும் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பெயர் சூட்டப்பட்டது என்பதையும் மகிழ்வுடன் நினைவுகூர்ந்து பதிவிடுகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்