சர்ச்சை பேச்சு விவகாரத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபனுக்கும் நேற்று நாகர்கோவில் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் ஜூலை 18-ல் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்எல்ஏ போன்றோரை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா விமர்சித்து பேசியது சமூக வலைதளங்களில் பரவியது. ஜார்ஜ் பொன்னையா, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அருமனை கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபன் ஆகியோரை அருமனை போலீஸார் கைது செய்தனர்.
ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனு குழித்துறை, நாகர்கோவில் நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயர் நீதிமன்ற மதுரை கிளை அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஸ்டீபனின் ஜாமீன் மனுவை குழித்துறை நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்திருந்தது. அவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அருள்முருகன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டீபனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அவர் திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் எனவும், இனி வரும் காலங்களில் மத பிரச்சினைகளை தூண்டும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago