மக்கள் நலப் பணிகளில் முழுகவனம் செலுத்தாமல், அதிமுகவினரை பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக அரசு அக்கறை காட்டுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடு,அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:
அதிமுக அமைப்புச் செயலாளர், சட்டப்பேரவை எதிர்க்கட்சி கொறடாவான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களிலும், அவருடன் தொடர்பில் இருக்கும் ஒருசிலரது இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதாக செய்திகள் வருகின்றன. இதனால்,மக்கள் நலப் பணிகளில் முழுகவனம் செலுத்தாமல், அதிமுகவினரை பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக அரசு அக்கறை காட்டுகிறதோ என்ற சந்தேகமும், வருத்தமும் எழுகிறது.
துடிப்பான செயல்வீரரான எஸ்.பி.வேலுமணி மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் திட்டமிட்டு பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தநிலையில், தற்போதைய சோதனைகண்டிக்கத்தக்கது என்றே கருதுகிறோம்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் பொய் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க அதிமுக எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால், ஆதாரம் ஏதுமின்றி, உண்மை என்ன என்பதை கண்டுபிடிக்கும் முன்னரே ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது.
இத்தகைய சோதனைகளை தாங்கி நின்று, மக்கள் பணியில் அதிமுக தொடர்ந்து ஈடுபடும். அன்பு, அற வழியில் தொடர்ந்து அரசியல் தொண்டாற்றும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago