பிரதமர், அமைச்சர்கள் மற்றும் பாரத மாதா குறித்து சர்ச்சையாகப் பேசி கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, அருமனையில் ஜூலை 18-ம் தேதி பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, மாநில அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் பாரத மாதா ஆகியோரை விமர்சித்துப் பேசினார். இவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அருமனை காவல் நிலையத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் அளித்த புகாரின்பேரில் ஜார்ஜ் பொன்னையா, கிறிஸ்தவ இயக்கச் செயலர் ஸ்டீபன் உட்பட 4 பேர் மீது 7 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடினர்.
இந்நிலையில் ஜார்ஜ் பொன்னையா சென்னைக்கு காரில்தப்பிச் செல்லும்போது மதுரை அருகே போலீஸார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு குழித்துறை, நாகர்கோவில் நீதிமன்றங்களில் ஜார்ஜ் பொன்னையா தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதையடுத்து அவர் உயர் நீதிமன்றக் கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
அதில், அருமனை அஞ்சலிக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், பாரத மாதாவை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும் என் மீது வழக்குப் பதிவு செய்தனர். நான் பேசியதை தவறான புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்தில் பரப்பியுள்ளனர். இருப்பினும் அந்தப் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டேன். எனக்கு இதய நோய் உட்பட பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் உள்ளன. இதனால் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் வயது, இதய நோயாளியாக இருப்பதைக் கருத்தில் கொண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும். வரும் காலங்களில் மதம், அரசியல் பிரச்சினைகளைத் தூண்டும் வகையிலோ, அமைதியைக் குலைக்கும் வகையிலோ பேசக்கூடாது. இது தொடர்பாக மனுதாரர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி ஜார்ஜ் பொன்னையா மற்றொரு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக அருமனை போலீஸ் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago