நூறுநாள் வேலைத் திட்ட பணியாளர்கள் வேலை செய்யாமல் மரத்தடியில் அமர்ந்து பொழுதைப் போக்குவதாக உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் வேதனை தெரிவித்தார்.
பாராலிம்பிக் விளையாட்டு சங்கம் சார்பில், நீதிபதி என்.கிருபாகரனுக்கு மதுரையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. நீதிபதி பி.புகழேந்தி தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத் திறனாளி நல்வாழ்வுச் சங்க தலைவர் எஸ்.பூபதி, வழக்கறிஞர் கு.சாமிதுரை வரவேற்றனர்.
விழாவில் நீதிபதி என். கிருபாகரன் பேசியதாவது: மாற்றுத் திறனாளிகளை உயர்ந்த திறனாளிகள் என்றே அழைக்க வேண்டும். ஒலிம்பிக்கில் ஒரு தங்கப்பதக்கம் மட்டுமே பெற்றது வெட்கக் கேடானது. திறமையான இளைஞர்களைக் கண்டறிந்து மத்திய, மாநில அரசுகள் உரிய பயிற்சி அளித்துஇருந்தால் சர்வதேச அளவில் கொடிகட்டிப் பறந்திருப்போம்.
இளைஞர்கள் டாஸ்மாக் கடைகளில் அதிக நேரம் செலவிடுகின்றனர். தமிழகத்தில் வேலை செய்ய ஆட்கள் இல்லை. உணவகத்தில் தட்டுக் கழுவ மணிப்பூரில் இருந்து ஆட்கள் வர வேண்டிய நிலை உள்ளது. நூறு நாள் வேலைத் திட்டம் அருமையானது. ஆனால், வேலை செய்யாமல் மரத்தடியில் அமர்ந்து பேசி பொழுது போக்குகின்றனர்.
தமிழகத்தில் அனைத்தும் இலவசமாகக் கிடைக்க வேண்டும் என நினைக்கின்றனர். வெளி மாநிலதொழிலாளர்கள் குறைந்த சம்பளத்துக்கு அதிகம் உழைக்கின்றனர். இதைத் தொடர விட்டால் வெளி மாநிலத் தொழிலாளர்கள் முதலாளிகளாக மாறிவிடுவார்கள்.
தமிழ் பேசுவோர், தமிழில் படிப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தாய்மொழி தெரியாமல் எத்தனை மொழி தெரிந்திருந்தாலும் நல்ல மனிதனாக இருக்க முடியாது என்றார். வழக்கறிஞர் ஆர்.காந்தி, காந்தி அருங்காட்சியக இயக்குநர் கே.ஆர்.நந்தாராவ் உள்ளிட்டோர் பேசினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago