மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களைசெயல்படுத்தவே கடன் வாங்கப்பட்டதாக முன்னாள் முதல்வரும் தற்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரத்தில் முன்களப் பணியாளர்களுக்கு அதிமுகசார்பில் நலத்திட்ட உதவிகளைஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி நேற்று வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு நிதிநிலை குறித்துவெள்ளை அறிக்கை வெளியிடுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதில் வரவு செலவு விவரம் வெளியிடப்படுகிறது. 2011-ம்ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றபோது, திமுக அரசு ரூ.ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி கடனை விட்டுச் சென்றது. படிப்படியாக கடன் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன்வாங்கதான் வேண்டியுள்ளது.அதில், பாதிக்கும் மேலாக மூலதனமாக உள்ளது. பல்வேறு மாநிலங்களும் வளர்ச்சிக்காகவே கடன்வாங்குகின்றன. அதன் அடிப்படையில்தான் தமிழக அரசும் கடன் பெற்றது, திமுக அரசும் கடன் பெற்றது.
மின் கட்டணத்தை பல ஆண்டுகளாக உயர்த்தவில்லை. மின் சாதனங்கள், சம்பளம், நிலக்கரி, போக்குவரத்துச் செலவு, டிரான்ஸ்பார்மர் ஆயில் உள்ளிட்டவற்றின் விலைஉயர்ந்து நஷ்டம் ஏற்பட்டது. இதுதிமுக ஆட்சியிலும் நடந்து உள்ளது. இதேபோல டீசல் விலைஉயர்ந்தபோதிலும் போக்குவரத்துக் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதனால் அத்துறையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எந்த அரசு வந்தாலும் இதனை தவிர்க்க முடியாது.
ஏற்கெனவே, அதிமுக அரசு போட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்கள். முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கின்றனர். 100 நாள் திமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றியதாக எனக்குத் தெரியவில்லை.
அதிமுக ஆட்சியில் முதல்வர் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் மூலம் 9.75 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, 5.25 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. அதே திட்டத்தைத்தான் திமுக அரசும் செயல்படுத்தி வருகிறது. தேர்தல் நேரத்தில் மக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாளில் தீர்வு காணப்படும் என்றனர். அதனைத்தான் நாங்கள் இப்போது கேட்கிறோம்.தேர்தலின்போது மக்களுக்கு வாக்குறுதிகளை அளித்துவிட்டு, ஆட்சியில் அமர்ந்தவுடன் ஏமாற்றி வருகின்றனர்.
நீட் தேர்வு ரத்து தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை கிடைத்த பிறகும் இதுவரை நடவடிக்கை இல்லை. 505 அறிவிப்புகளை தேர்தலின்போது தெரிவித்த திமுக, ஆட்சிக்கு வந்து100 நாட்களாகியும் நிறைவேற்றவில்லை. உள்ளாட்சித் தேர்தல்குறித்து முறையாக மாநில அரசுஅறிவித்தவுடன் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம். முன்னாள்அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுகவில்தான் இருக்கிறார்.
அதிமுக அவைத் தலைவர் நியமிப்பது தொடர்பாக கட்சித் தலைமை முடிவெடுக்கும். மேட்டூர் அணை உபரிநீரைக் கொண்டு 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த சேலம் ஆட்சியரை வலியுறுத்தியுள்ளோம். மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் ஏரிகளுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago