கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரை - காலில் விழ வைத்த சம்பவத்தில் விவசாயி மீது வழக்கு பதிவு :

By செய்திப்பிரிவு

கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள ஒட்டர்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் கலைச்செல்வி. அவரது உதவியாளராக அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி (56) பணியாற்றி வருகிறார். கடந்த 6-ம் தேதி அன்னூர் வட்டத்துக்கு உட்பட்ட கோபிராசிபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி கோபாலசாமி (38), தனதுஇடம் தொடர்பான ஆவணங்களை சரிபார்க்க கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலருக்கும் கோபாலசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்த முத்துசாமி, அரசு அதிகாரியை திட்டக் கூடாது என கோபாலசாமியிடம் கூறியுள்ளார்.இருதரப்பு வாக்குவாதத்தின் போது, கோபாலசாமியை முத்துசாமி கீழே தள்ளிவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து, முத்துசாமியை வேலையில் இருந்து நீக்கி விடுவதாக கோபாலசாமி மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன முத்துசாமி கோபாலசாமியின் காலில் விழுந்து மன்னிப்பு கோரி கதறி அழுதார். இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸுக்கு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டார்.

மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆகியோர் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அன்னூர் வட்டாட்சியர் ரத்தினம், மேட்டுப்பாளையம் சரக துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெய் சிங் உள்ளிட்டோர் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் உள்ளிட்டோரை நேற்று அன்னூர் காவல் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தினர். விசாரணை அறிக்கை அடிப்படையில் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில், கோபாலசாமி மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 353-ன் கீழ் (அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உதவியாளர் முத்துசாமி அளித்த புகாரின் பேரில் கோபாலசாமி மீது இ.த.ச. பிரிவு 353, 506 (I) (மிரட்டல் விடுத்தல்) மற்றும் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கோபாலசாமி தந்த புகார் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்