அலைகளின் சீற்றத்தால் மணல் அரிப்பு - நாகையில் 150 மீட்டர் தொலைவுக்கு உட்புகுந்த கடல் நீர் :

By செய்திப்பிரிவு

நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்தில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கடற்கரையையொட்டி உள்ளன. இப்பகுதி மீனவர்கள் தங்களின் ஃபைபர் படகுகளை கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்ததுடன், கடற்கரையோரத்தில் பந்தல்கள் அமைத்து, அதில் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை வைத்திருந்தனர்.

இந்நிலையில், அமாவாசை தினமான நேற்று கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்ததால், கடற்கரையில் மணல் அரிப்பு ஏற்பட்டு, 150 மீட்டர் தொலைவுக்கு கடல்நீர் உட்புகுந்து, கரையையொட்டி நிறுத்தப்பட்டிருந்த ஃபைபர் படகுகள், பந்தல்களில் வைக்கப்பட்டிருந்த வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையறிந்த மீனவர்கள் உடனடியாக கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட ஃபைபர் படகுகளை மீட்டு, சற்று தொலைவுக்கு கொண்டு சென்று நிறுத்தி வைத்தனர். மேலும், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களையும் மீட்டு, பாதுகாப்பான இடத்துக்கு மாற்றினர்.

இதுகுறித்து நம்பியார் நகர் மீனவ கிராம மக்கள் கூறியது: கடல் அலைகளின் சீற்றம் காரணமாக, கடற்கரையிலிருந்து 150 மீட்டர் தொலைவுக்கு உட்புகுந்த கடல்நீர், இன்னும் 50 மீட்டர் தொலைவு வந்திருந்தால், இங்குள்ள வீடுகள் கடல் நீரில் மூழ்கியிருக்கும். எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கடற்கரையையொட்டி 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு கருங்கற்களை கொட்டிவைக்க வேண்டும் என்றனர்.

அக்கரைப்பேட்டை, கீச்சாம்குப்பம், கல்லார், சாமந்தான்பேட்டை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் மிதமான கடல் சீற்றம் இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்