மத்திய அமைச்சருக்கு ஆதரவாக, கோவையில் கூட்டம் நடத்த திட்டமிட்டதாக, மாநில பொதுச்செயலாளர்கள் இருவர் லோக் ஜனசக்தி கட்சியின் தமிழ் மாநிலப் பிரிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பிஹார் மாநிலத்தை மையமாக கொண்டு, தேசிய அளவில் இயங்கி வரும் லோக் ஜனசக்தி கட்சிக்கு, தமிழகத்திலும் கிளை உள்ளது. இக்கட்சியின் நிறுவனத் தலைவராக இருந்தவர் ராம்விலாஸ் பாஸ்வான். இவர், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சராகவும் பணியாற்றி வந்தார். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த ஆண்டு ராம்விலாஸ் பாஸ்வான் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, அவரது மகனும், மக்களவை உறுப்பினருமான சிராக் பாஸ்வான் அக்கட்சியின் தேசிய தலைவரானார்.
சிராக் பாஸ்வானின் பெரியப்பா பசுபதி குமார் பராஸ். ராம்விலாஸ் பாஸ்வான் மறைந்து சில மாதங்களுக்கு பின்னர், அவரது கட்சியில் பிளவு ஏற்பட்டது. மக்களவையில் சிராக் பாஸ்வான் ஒரு அணியாகவும், பசுபதி குமார் பராஸ் தலைமையிலான அவர் உள்ளிட்ட 5 எம்.பிக்கள் தனி அணியாகவும் செயல்பட்டு வந்தனர். இதற்கிடையே, சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது, பசுபதி குமார் பராசுக்கு மத்திய அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
இதற்கிடையே, சமீபத்தில் லோக் ஜனசக்தி கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில்,‘‘ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் சிராக் பாஸ்வானை கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக கூட்டத்தில் பசுபதி குமார் பராஸ் ஆதரவாளர்களால் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில், பசுபதி குமார் பராஸ் உள்ளிட்ட 5 எம்.பி.க்களையும் கட்சியில் இருந்து சிராக் பாஸ்வான் நீக்கினார்.
இந்த விவகாரத்தை தொடர்ந்து, லோக் ஜனசக்தி கட்சியில் பசுபதி குமார் பராஸ்-க்கு ஆதரவாக கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கட்சியின் அனைத்து மாநிலத் தலைவர்களுக்கும் அவர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், லோக் ஜனசக்தி கட்சியின் தமிழ்நாடு மாநிலப் பிரிவில், மாநில பொதுச்செயலாளர்களாக பணியாற்றி வந்த கோவையைச் சேர்ந்த எஸ்.பாலாஜி, புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.பாண்டிச்செல்வம் ஆகியோர், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பசுபதி குமார் பராஸ்-க்கு ஆதரவாக, கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து மேற்கண்ட இருவரும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக லோக் ஜனசக்தி கட்சியின் தமிழக தலைவர் ச.வித்யாதரன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் நேற்று கூறும்போது, ‘‘எஸ்.பாலாஜி, எம்.பாண்டிச்செல்வம் ஆகியோர் ‘ரிபப்ளிக் பார்ட்டி ஆஃப் இந்தியா’கட்சியில் இருந்து, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், லோக் ஜனசக்தி கட்சிக்கு வந்தனர். இங்கு இருவரும் மாநில பொதுச்செயலர்களாக பதவி வகித்தனர். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி இவர்கள் இருவரும், இன்று (9-ம் தேதி) கோவையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ்-க்கு ஆதரவாக, தங்களது ஆதரவாளர்களுடன் கூட்டத்தை நடத்த திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இதுதொடர்பான உறுதியான தகவல் எனக்கு கிடைத்தது. இதைத் தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் உண்டாக்கும் வகையிலும், தலைமை அனுமதியில்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டதாலும் பாலாஜி, பாண்டிச்செல்வம் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த 6-ம் தேதி நீக்கப்பட்டனர். கட்சியின் தேசியத் தலைவர் சிராக் பாஸ்வானின் ஒப்புதலோடு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago