ஆதார் வெப்சைட் சர்வர் பழுதுஅடைந்து உள்ளதால் கடந்த ஒரு வாரமாக புதிய ஆதார் கார்டு, ஆதார் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.
ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், பெயர் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள முன்பு ஆதார் மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது ஆதார் அட்டையில் உள்ள திருத்தங்களை மாற்றவிரும்பினால், UIDAI-ன் அதிகாரப்பூர்வ தளமான https://uidai.gov.in -க்கு சென்று அவர்களுக்கான சரியான ஆவணங்களை பதிவு செய்து முகவரி, பெயர் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம். இந்த எளிய நடைமுறை வந்த பிறகு பொதுமக்கள் தங்கள் ஆதார் கார்டுகளில் உள்ள திருத்தங்களை மிக எளிதாக மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் சமீப காலமாக ஆதார் வெப்சைட் சர்வர் அடிக்கடி பழுதாகிறது. ஒரு முறை பழுதானால் அது சரியாவதற்கு ஒரு வாரம் ஆகிவிடுகிறது. அப்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு பழுதடைந்த ஆதார் வெப்சைட் சர்வர் இதுவரை சரிசெய்யப்படவில்லை. அதனால் பொதுமக்களால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஆதார் கார்டு திருத்தங்களை மேற்கொள்ள முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர். அதுபோல், புது கார்டு விண்ணப்பிப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
இதுகுறித்து இ-சேவை ஊழியர்கள் கூறும்போது, ‘‘ஆதார் வெப்சைட் சர்வரை பெங்களூருவில் உள்ள தலைமை அலுவலகத்தில்தான் சரிசெய்ய வேண்டும். சர்வர் பழுதால் ஒரு வாரமாக மக்கள் திருத்தங்களை மேற்கொள்ள முடியவில்லை. ஏற்கெனவே திருத்தங்களை மேற்கொண்டவர்களுக்கான ஆதார் கார்டுகளை பதிவிறக்கம் செய்ய முடிகிறது’’ என்றார்.
கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும் காலம்என்பதால் தமிழக அரசு உடனடியாக ஆதார் வெப்சைட் சர்வர் பிரச்சினையை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago