அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்காது - மேகேதாட்டு விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் : மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்

By செய்திப்பிரிவு

மேகேதாட்டுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்காது என மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கூறியுள்ளதால், இப்பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும் என தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து, தமிழக பாஜக சார்பில் அதன் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தை தமிழக பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தொடங்கி வைத்தார். பாஜக மூத்த நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன், ஜி.கே.நாகராஜ், கருப்பு முருகானந்தம், வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கார்வேந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில், கே.அண்ணாமலை பேசியது: தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனைக்காக மாதந்தோறும் ஆய்வுக் கூட்டத்தை கூட்டும் அரசு, விவசாயிகளுக்கு ஆதரவாக இதுவரை ஒரு ஆய்வுக் கூட்டமாவது நடத்தி உள்ளதா?

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, எங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில், பாஜகவுக்கு வயிற்றில் பிரச்சினை உள்ளது என பேசுகிறார். அவர் கட்சியை விட்டு, வீட்டுக்கு செல்வதற்கான நேரம் வந்துவிட்டது. இதேபோல, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் ஆகியோரும் பாஜகவின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளனர். பாஜகவை யார் கொச்சைப்படுத்தினாலும், அவர்களது அனைத்து விஷயங்களையும் வீதிக்கு கொண்டு வருவோம். மீறிப் பேசினால், அவர்களின் வர்த்தகத்தில் கை வைப்போம். அவர்கள் செய்யும் துரோகத்தை பட்டியலிட்டு பதிலடியை சம்மட்டி அடிபோல கொடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறும்போது, ‘‘நாடாளுமன்ற கூட்டத்தொடரில், கர்நாடக எம்பி ஒருவர் மேகேதாட்டு அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசின் அனுமதி எப்போது வழங்கப்படும் என கேள்வி எழுப்பினார். அதற்கு, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மேகேதாட்டு திட்ட அறிக்கைக்கு, தமிழகத்தின் அனுமதி, காவிரி மேலாண்மை வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல், மத்திய அரசு அனுமதி அளிக்காது என திட்டவட்டமாக பதில் அளித்துள்ளார். இதனால், மேகேதாட்டு அணை பிரச்சினை முடிவுக்கு வரப் போகிறது” என்றார்.

போலீஸ் அனுமதி இல்லை

முன்னதாக, தஞ்சாவூரில் உள்ள ராஜராஜசோழன் சிலை அருகேயிருந்து, அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மாட்டு வண்டியில் உண்ணாவிரதப் பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற பாஜக உண்ணாவிரதப் போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்