உதகை வந்தார் குடியரசுத் தலைவர் :

By செய்திப்பிரிவு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உதகை வந்தடைந்தார். அவரை அமைச்சர்கள் வரவேற்றனர்.

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா மற்றும் பேரவை அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை அரங்கில், நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கருணாநிதியின் உருவப் படத்தை திறந்து வைத்தார்.

பின்னர், சென்னை ஆளுநர் மாளிகையில் தங்கிய குடியரசு தலைவர், நேற்று (ஆக.3) காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சூலூர் விமானப் படைத் தளத்துக்கு 10.40 மணிக்கு வந்தார்.

அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சு. முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலர் குமார் ஜெயந்த், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் 11.05 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட குடியரசுத் தலைவர் 11.45 மணிக்கு நீலகிரி மாவட்டம் உதகை தீட்டுக்கல் பகுதிக்கு சென்றடைந்தார். அவருடன், மனைவி சவிதா, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோரும் வந்தனர். தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், கார் மூலம் மதியம் 12.10 மணிக்கு குடியரசுத் தலைவர் ராஜ்பவன் சென்றடைந்தார்.

அங்கு 3 நாட்கள் ஓய்வெடுக்கும் அவர், நேற்று மாலை பிரசித்தி பெற்ற உதகை தாவரவியல் பூங்காவை பார்வையிட்டார். இன்று காலை வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.

குடியரசுத் தலைவருக்காக ராஜ்பவனில் பிரத்யேகமாக பழங்குடியினரின் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினர் கிராமம் மற்றும் தேயிலை தொழிற்சாலையையும் ராம்நாத் கோவிந்த் பார்வையிட உள்ளார். 6-ம் தேதி காலை 10.30 மணியளவில் உதகையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்