உடுமலையில் பழங்குடியினர் கிராமங்களில் விநியோகிக்கப்பட்ட - தரமற்ற ரேஷன் அரிசியை புறக்கணித்து மக்கள் போராட்டம் :

By செய்திப்பிரிவு

உடுமலைப்பேட்டை வட்டம் மாவடப்பு, காட்டுப்பட்டி பழங்குடியினர் கிராமங்களில் விநியோகிக்கப்பட்ட தரமற்ற ரேஷன் அரிசியை வாங்க மறுத்தும், பொருட்களைப் புறக்கணித்தும் மலைவாழ் பழங்குடியின மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்தில் மாவடப்பு, காட்டுப்பட்டி பழங்குடியினர் கிராமங்களில் சுமார் 200 பேர் வசிக்கின்றனர். இந்தக் கிராம மக்களுக்கு மாவடப்பு கிராமத்தின் அரசுப் பள்ளியில் வைத்து ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை விநியோகிப்பது வழக்கம்.

இதற்கு முன்பு, இப்பகுதி மக்கள் சுமார் 7 கி.மீ தூரம் நடந்து சென்று, காடம்பாறையில் ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக ஊருக்கே வந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில், கடந்த 3 மாதங்களாக வழங்கப்பட்டுவரும் ரேஷன் அரிசி மிகவும் தரமற்றதாகவும், சமைத்து சாப்பிட முடியாத வகையிலும் உள்ளது என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், காட்டுப்பட்டி கிராம மக்களுக்கு நேற்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. அப்போது, விநியோகம் செய்யப்பட்ட அரிசி தரமற்று இருந்ததாக மக்கள் குற்றம்சாட்டி, கிராமத்திலேயே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, "ஒவ்வொரு முறையும் ரேஷன் பொருட்கள் தரமாக கிடைக்கும் என்று நம்புகிறோம். ஆனால், எங்கள் நம்பிக்கை வீணடிக்கப்படுகிறது. தற்போது வழங்கும் அரிசியை 2 மணி நேரம் உலையில் போட்டாலும் வேகாமல் உள்ளது. இந்த அரிசியை எப்படி சாப்பிடுவது? பாதி அரிசியை தரமானதாகவும், பாதி அரிசியை தரமற்ற முறையிலும் வழங்குகிறார்கள். குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்படுகிறோம்.

எங்கள் நிலை மாறுவதில்லை

இதேபோல, மாதந்தோறும் 10-ம் தேதிக்குள் வழங்க வேண்டிய 35 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்களை, ஒவ்வொரு மாதமும் இறுதியில் வழங்குகிறார்கள். இன்னும் சில நாட்களில் அடுத்த மாதம் வந்துவிடும். இனி அடுத்த பொருட்களுக்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டிய சூழல்ஏற்படுகிறது. அதேபோல, மண்ணெண்ணெயும் முறையாக வழங்குவதில்லை. முன்பு 10 லிட்டர் வழங்கி வந்தார்கள். தற்போது 2 லிட்டர் மட்டுமே வழங்குகிறார்கள். மலையில் வேறு எரிபொருள் வசதியும் இல்லை.

ரேஷனில் என்னென்ன பொருட்கள் வாங்குகிறோம் என்பதை அலைபேசியிலும் தெரிந்து கொள்ள முடியாதபடி, எந்தவொரு குறுந்தகவலும் யாருக்கும் வருவதில்லை. தற்போது மலைவாழ் கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி முற்றிலும் தரமற்றதாக உள்ளது. யார் ஆட்சி செய்தாலும், எங்கள் நிலை மாறுவதில்லை. ரேஷன் அரிசியை வாங்க மறுத்து, அரசு ஊழியர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.

திருப்பூர் மாவட்ட வழங்கல் அலுவலர் எம்.முருகன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, "மலைவாழ் மக்களுக்கு வழங்க ஹல்லிங், எஸ்.டி. ஆகிய இரண்டு ரகங்களில் கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு வழங்குகிறோம். மலைவாழ் மக்களுக்கு தரமான எஸ்.டி. ரக அரிசியைத்தான் வழங்கி வருகிறோம். இதில், காழ்ப்புணர்ச்சி ஏதும் உள்ளதா என தெரியவில்லை. ரேஷன் பொருட்கள் கொண்டு சென்ற ஊழியரிடம் பேசியுள்ளோம். மலைவாழ் மக்களுக்கு சமையல் எரிவாயு வசதி இல்லாததால், மண்ணெண்ணெய்தான் பயன்படுத்துவார்கள். அதில் அளவு குறைக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்கிறேன்" என்றார்.

மாவட்ட அரசு அலுவலர்கள் கூறும்போது, "மலைவாழ் மக்களுக்கு அரிசி, பாமாயில் உட்பட அனைத்தும் தரமானதாக வழங்குகிறோம். தற்போது பிரச்சினை எழுந்திருப்பதால், அந்த அரிசியின் மாதிரிகளை எடுத்துவரக் கூறியுள்ளோம். இப்பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்