தேர்தலில் பணத்துக்கு விலைபோன நண்பர்கள் : திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆதங்கம்

By செய்திப்பிரிவு

காட்பாடியில் உள்ளாட்சித் தேர்தல்தொடர்பான திமுக ஆலோசனைக் கூட்டம் சித்தூரில் உள்ளதிருமண மண்டபம் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை நடந்தது.

கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் பேசியது: எங்கோ குடியாத்தத்தில் இருந்து வந்த ஒருவர், சேர்க்காடு எங்கிருக்கிறது, அம்மோவார்பள்ளி எங்கிருக்கிறது என தெரியாத ஒருவர் இந்த தேர்தலில் எப்படி உழைத்தார். எனக்கு அதுதான் தெரிய வேண்டும். நான் எப்படியோ 2 ஆயிரம் பேர் போட்ட தபால் வாக்கில்தான் வெற்றி பெற்றேன்.

எனது விளை நிலத்தில் இருந்து ஏன் பயிர் விளையவில்லை என்ற காரணம் தெரியவேண்டும். காட்பாடியில் மட்டுமில்லை, தமிழகத்தில் பல தொகுதிகளில் இதேபோல் உள்ளது. நான் அதைப் பற்றி எல்லாம் கவனத்தில் கொண்டுள்ளேன். எனது தொகுதி என்பதால் அதிகம் கவனம் எடுத்திருக்கிறேன்.

குடியாத்தத்தில் இருந்து வந்தவர் அண்ணனையே ஜெயித்துவிடுவாரா என சும்மாவே இருந்தவர்கள். இரண்டாவது, தேர்தல் வேலையே செய்யாமல் இருந்தவர்கள். நான் கடைசி 5 நாள் வெளியே வந்திருந்தால் இன்னும் சமாளித்துஇருப்பேன். உடல்நிலை சரியில்லாததால் படுத்துவிட்டேன். மூன்றாவது சொன்னால் வருத்தப்படக் கூடாது, சொல்லாமலும் இருக்கக்கூடாது.

எம்.ஜி.ஆரின் படைபலம், பண பலத்துக்கு தலை வணங்காத என்னுடைய நண்பர்கள் பலர் இந்தமுறை பணத்துக்கு விலை போயுள்ளனர். இது வெட்கிக் தலைகுனியகூடிய சமாச்சாரம். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கூறவில்லை. இந்த முறை நான் பெற வேண்டிய வெற்றிக்கு ஒருமுறை இந்த தொகுதியை சுற்றி வந்திருக்க வேண்டும். அதில் வருத்தம் உள்ளது.

எப்படி நடந்தது என்று தளபதியிடம் சொல்லி பல இடங்களில் சுற்றி வாங்கிய ரிப்போர்ட் என் கையில் இருக்கிறது. யார், யாருடன் எல்லாம் போனில் பேசினார்கள் என்ற டேப் என்னிடம் இருக்கிறது. யார் யார் எவ்வளவு வாங்கினார்கள் என்ற விவரமும் என் கையில் உள்ளது. யார் மூலமாக வாங்கினார்கள் என்ற விவரமும் தெரியும். பின்புறமாக சென்று பணத்தை வாங்கச் சொல்லி சமாதானம் செய்தார்கள் என்றும் தெரியும். என்ன குறை வைத்தேன் உங்களுக்கு. நான் இந்த தேர்தலுடன் ஓய்வு பெறலாம் என்று நினைத்தேன். ஆனால், நான்ஓய்வுபெற மாட்டேன் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்