ஆர்எஸ்எஸ் தலைவருக்காக சாலையை சீரமைக்க சுற்றறிக்கை அனுப்பிய - மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் பணியில் இருந்து விடுவிப்பு : நடவடிக்கையின் பின்னணி என்ன?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

ஆர்எஸ்எஸ் தலைவர் வருகைக்காகச் சாலைகளைச் சீரமைத்து தூய்மை செய்ய சுற்றறிக்கை அனுப்பிய மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று மதுரை வந்தார். அவர் 26-ம் தேதி வரை மதுரையில் தங்குகிறார். அவரது வருகையையொட்டி மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் ஆர்எஸ்எஸ் தலைவர் செல்லும் சாலைகளைச் சீரமைத்தல், சுத்தமாக வைத்தல், தெரு விளக்குகளைப் பராமரித்தல் போன்ற பணிகளைச் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகலை திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளே சமூக வலைதளங்களில் அதிகஅளவு பகிர்ந்து, அரசு உயர் பொறுப்பில் இல்லாத ஆர்எஸ்எஸ் தலைவருக்காக மாநகராட்சி நிர்வாகம் எந்த விதியின்படி சுற்றறிக்கை வெளியிட்டது எனக் கேள்வி எழுப்பினர்.

அரசியல்ரீதியாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தை திமுக எதிர்த்துவரும் நிலையில் மாநகராட்சி உதவி ஆணையரின் இந்த உத்தரவு அக்கட்சிக்கும், அரசுத் துறை உயர் அதிகாரிகளுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் மாநகராட்சி உதவிஆணையர் சண்முகம், ஆணையருக்குத் தெரியாமல் இந்தச் சுற்றறிக்கையை வெளியிட்டிருக்க வாய்ப்பு இல்லை என குற்றம்சாட்டினர்.

ஆணையர் பதிலும், உத்தரவும்

இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் நேற்றிரவு வரை உதவி ஆணையரின் சுற்றறிக்கை சரியானது என்றும், இசட் பிளஸ் பாதுகாப்பில் வருவோருக்கு அவர் செல்லும் பகுதியில் சாலைகளைச் சீரமைப்பது வழக்கமான நடவடிக்கையே என்றும் விளக்கம் அளித்தார்.

ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் ஆணையர் கார்த்திகேயன், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதுபோல சுற்றறிக்கை வெளியிட்ட உதவி ஆணையர் சண்முகத்தை பணியில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார். ஆணையரின் இந்த உத்தரவு சர்ச்சையையும், அதிகாரிகளிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறும்போது, மிக முக்கியப் பிரமுகர்கள் யாராவது மதுரை வந்தால் அவர்கள் செல்லும் பகுதிகளை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியோ அல்லது வாய்மொழியாகவோ கூறி சுத்தம்செய்ய அறிவுறுத்துவது வழக்கம்தான். ஏனென்றால் அவர்கள் செல்லும் பகுதியில் சாலை சரியில்லை, குப்பை குவிந்து கிடக்கிறது என்றுஅவர்கள் குறை கூறிச் சென்றால் மாநகராட்சிக்குத்தான் அவப்பெயர். அவப்பெயரை தவிர்க்கவே மிக முக்கியப் பிரமுகர்களுக்குச் சாலை சீரமைப்பு, சுகாதாரப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அந்த அடிப்படையில்தான் உதவி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பினார்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை திமுக அரசியல்ரீதியாக எதிர்க்கும் நிலையில் கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடி காரணமாக இந்த சுற்றறிக்கை இந்த அளவுக்குச் சர்ச்சையாகி கடைசியில் உதவி ஆணையரை பணியில் இருந்து விடுவிடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலிட நெருக்கடியால்தான் மாநகராட்சி ஆணையர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்