எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்கிய அரசுப் பேருந்து நடத்துநருக்கு, திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நேற்று கட்டாய கரோனாபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவையில் இருந்து திருப்பூருக்கு 57 பயணிகளுடன் நேற்று காலை அரசுப் பேருந்து புறப்பட்டது. அப்போது நடத்துநர் எச்சில் தொட்டு பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கியுள்ளார். இதில், சிலர் அதிருப்தியடைந்தனர். இதை பார்த்து, கரோனா காலகட்டத்தில் பயணச்சீட்டை எச்சில் தொட்டு தர வேண்டாம் என சிலர் கூறியுள்ளனர். இருப்பினும், நடத்துநர் தொடர்ந்து எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்கினார்.
பேருந்தில் பயணித்த மாநகராட்சி சுகாதாரத் துறை இரண்டாம் நிலை அலுவலர் முருகேசன், சுண்டமேடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தகவல் அளித்தார். ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு வந்த நடத்துநருக்கு, கட்டாய கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர் முருகேசன் கூறும்போது, "கரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், தளர்வுகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளுக்கு தொடர்ந்து நடத்துநர் எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்கியுள்ளார். இதையடுத்து, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களிடம் தெரிவித்து, திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில்உள்ள கோவை பேருந்து நிறுத்தத்தில் அவருக்கு கட்டாய கரோனாபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கரோனா பரிசோதனை முடிவுகள் வரும்வரை, அரசுப் பேருந்து நடத்துநர் குணசேகரனை, பணியில் இருந்து விடுவிக்கவும் போக்குவரத்துக் கழக அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்"என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago