நீட் தேர்வு தடை சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் : திருமாவளவன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காமராஜர் பிறந்த தினத்தையொட்டி திட்டக்குடியில் நேற்று அவரது சிலைக்கு மாலை அணிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மேகேதாட்டு அணை பிரச்சினையில் தமிழக அதிமுக, பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியிருப்பது ஆறுதலையும், நம்பிக்கையும் அளிப்பதாக உள்ளது.

நீட் தேர்வு தொடர்பாக முதல்வர் அமைத்த நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கையை முதல்வரிடம் அளித்துள்ளது. இதில், ‘85 சதவீத மக்கள் நீட் தேர்வு வேண்டாம்’ என்று கருத்து தெரிவித்துள்ளதாக அந்தக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

கொங்கு நாடு கோரிக்கை சங்பரிவார் அமைப்பின் கோரிக்கையாகும். இது சாதிய உள் நோக்கத்துடன், பிராந்திய உணர்வை தூண்டி தமிழகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியாகும். குஜராத்தி, மார்வாடிகளை காப்பாற்றவே இந்தக் கோரிக்கை பாஜகவால் கொண்டு வரப்படுகிறது என்றார்.

மேலும், அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு வேண்டாம் என ஏற்கெனவே திமுக ஆட்சியில் தடை சட்டம் கொண்டு வந்து, அத்தேர்வை ரத்துசெய்ததுபோல, நீட் தேர்வுக்கும் தமிழக அரசு தடை சட்டம் கொண்டு வர வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்