மேகேதாட்டு அணை விவகாரத்தில் - தமிழக அரசுக்கு உறுதுணையாக இருப்போம் : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தகவல்

By செய்திப்பிரிவு

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு தமிழக பாஜக உறுதுணையாக இருக்கும் என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பாஜக தமிழக தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள அண்ணாமலை சென்னையில் இன்று (ஜூலை 16) பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், சென்னை செல்லும் வழியில் நேற்று திருச்சி வந்த அவர்,சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்துக்கு எதற்காக நீட் தேர்வு வேண்டும்? எந்த வகையில் நீட் தேர்வு நல்லது? ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினர் எந்த அடிப்படையில் புள்ளிவிவரத்தைத் தயாரித்துள்ளனர் போன்றவற்றுக்கு நாளை (இன்று) சென்னையில் பதில் அளிக்கப்படும்.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு தமிழக பாஜக உறுதுணையாக இருக்கும். இதில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. கர்நாடகாவில் பாஜக ஆட்சி இருந்தாலும், தமிழக மக்கள்மற்றும் விவசாயிகளின் நலனுக்காக அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம்.

நாட்டில் எந்தச் சட்டம் இயற்றப்பட்டாலும் அது முஸ்லிம்களுக்கு எதிரானது என்று சிலர் கிளப்பிவிடுகின்றனர். குடியுரிமைச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. அதேபோல, பொது சிவில்சட்டமும் எந்த வகையிலும், யாருக்கும் எதிரான சட்டம் கிடையாது.

தடுப்பூசி டோக்கன்கள்

தமிழகத்துக்கு நிர்ணயித்த அளவைக் காட்டிலும் கூடுதலாக கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு கொடுத்துள்ளது. ஆனால், கரோனா தடுப்பூசி மையங்களில் 70 சதவீத டோக்கன்களை திமுக கரைவேட்டி அணிந்தவர்கள் வாங்கிச் சென்று தங்களுக்கு வேண்டியவர்களுக்கு விநியோகிக்கின்றனர். பொதுமக்களுக்கு 30 சதவீதடோக்கன்கள் மட்டுமே கிடைக்கின்றன. இதனால்தான் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நேரிடுகிறது. இதை மறைப்பதற்காக மத்திய அரசு மீது குறை கூறுவது நியாயமற்றது என்றார்.

முன்னதாக, அண்ணாமலையை வரவேற்பதற்காக சிந்தாமணி அண்ணா சிலை அருகே தடையை மீறி கூடி பட்டாசு வெடித்த பாஜகவினர் 10-க்கும் மேற்பட்டோர் மீது கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதேபோல், கரூர் மற்றும் பெரம்பலூரில் அண்ணாமலை கூறியதாவது: இன்று பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்கள் உள்ளனர். அடுத்த தேர்தலில் 150 எம்எல்ஏக்கள் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

கொங்குநாடு என்ற வார்த்தை பலகாலமாக புழக்கத்தில் இருக்கும் சமூக அடையாளம். பாஜக தலைவர்கள் யாரும் கொங்குநாடு குறித்து கருத்து கூறவில்லை.

திமுக ஆட்சி வந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது. பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் குறைக்கவில்லை.

நாங்கள் எப்போது வேண்டுமானாலும் குறைப்போம் என பொறுப்பில்லாத பதிலை நிதிஅமைச்சர் கூறுகிறார். பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.37 மாநில அரசுக்குவரியாக வருகிறது. இந்த வரியைஎன்ன செய்கின்றனர் என வெள்ளைஅறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்