தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் முதன்முறையாக விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால், அது தொடர்பாக டெல்டா மாவட்டங்களின் விவசாயிகளிடம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று கருத்துகளை கேட்டறிந்தார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில், அரசு தலைமைகொறடா கோவி.செழியன், எம்பிராமலிங்கம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் உள்ள எம்எல்ஏக்கள், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் சமய மூர்த்தி, வேளாண்மைத் துறை இயக்குநர் அண்ணாதுரை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை ஆணையர் வள்ளலார், தஞ்சாவூர் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட விவசாயப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், அமைச்சரிடம் விவசாயிகள் மனு வழங்கினர்.
இம்மனுவில் 100 நாள் வேலைதிட்டத்தில் 50 சதவீதத்தை விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். நன்மை செய்யும் பூச்சி இனங்களை அழிக்கக் கூடிய ரசாயன உரங்களை தடை செய்ய வேண்டும். அறுவடை இயந்திரம், நடவு இயந்திரங்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு அதிக எண்ணிக்கையில் வழங்க வேண்டும்.
நீர் மேலாண்மையை அதிகப்படுத்தும் வகையில் ஏரி, குளங்களை சீரமைக்க வேண்டும். தடுப்பணைகளை அதிகளவில் கட்ட வேண்டும். குறுவை, சம்பா சாகுபடிக்கு ஏற்ற வகையில் புதிய நெல் ரகங்கள், விதைகளை அறிமுகம் செய்ய வேண்டும். உற்பத்தி பொருட்களை பாதுகாக்க கிராமந்தோறும் கிட்டங்கி வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
இயற்கை விவசாயம்
பின்னர், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதுபோன்ற கூட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு, விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்த பின்னர், விவசாயத்துக்கான தனி பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்படும்.
இந்நிதிநிலை அறிக்கையில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். நெல்லில் ஈரப் பதத்தைக் குறைக்கும் வகையில் நெல் உலர்த்தும் இயந்திரங்களை வாங்க உத்தரவிடப்பட்டுஉள்ளது. மழையில் நெல் நனையாமல் இருக்க தார் பாய்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago