கும்மிடிப்பூண்டி அருகே கரும்புகுப்பம் கோயில் குளத்தில் மூழ்கி,3 சிறுமிகள் உட்பட 5 பேர் உயிர்இழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்டது கரும்புகுப்பம் கிராமம். இக்கிராமத்தில், அங்காளம்மன் கோயிலும், அதையொட்டி கோயில் குளமும் உள்ளது.15 அடி ஆழம் கொண்ட இந்த கோயில் குளத்தில் தற்போது 10 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது.
இந்நிலையில், கரும்புகுப்பம், சீதாம்மாள் தெருவைச் சேர்ந்த ராஜ் மனைவி சுமதி(38), முனுசாமி மனைவி ஜோதிலட்சுமி(32) ஆகியோர் நேற்று காலை அங்காளம்மன் கோயில் குளத்துக்கு துணி துவைக்கச் சென்றனர்.
அவர்களுடன் சுமதியின் மகள் அஸ்விதா(14), அவர்கள் வீட்டருகே வசிக்கும் குணசேகரன் மகள் நர்மதா(12), தேவேந்திரன் மகள் ஜீவிதா(14) ஆகிய சிறுமிகளும் சென்றனர். இச்சிறுமிகள் 3 பேரும்,புதுகும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்புகளில் படித்து வந்தனர்.
3 சிறுமிகளும் குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 3 பேரும் சேற்றில் சிக்கி அலறினர். அவர்களை காப்பாற்றச் சென்ற சுமதியும், ஜோதிலட்சுமியும் சேற்றில் சிக்கினர். இதை கரையில்இருந்த சுமதியின் மகன் அஸ்வந்த்(10), கிராமத்துக்கு சென்று தகவல் தெரிவித்தார். கிராம மக்கள் குளத்தில் இறங்கி அவர்களை மீட்க போராடினர். அதற்குள் 5 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனால், அவர்களின் உடல்களை மட்டுமே மீட்க முடிந்தது.
கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரித்து தலைமையிலான போலீஸார் 5 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முதல்வர் ரூ.5 லட்சம் நிவாரணம்
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், 5 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago