‘கொங்குநாடு’ மாநிலம் உருவாக்க கோவை பாஜக தீர்மானம் : பிரிவினை கூடாது என அதிமுக எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

தமிழகத்தை மாநில சீரமைப்பு செய்து, மேற்கு மண்டலத்தை புதிய மாநிலமாக ‘கொங்குநாடு’ என உருவாக்க வேண்டும் என்று பாஜக கோவை வடக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழக மக்கள் மத்தியில் பிரிவினையை தூண்ட வேண்டாம் என அதிமுக எச்சரித்துள்ளது.

அன்னூரில் நடைபெற்ற பாஜக கோவை வடக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

மத்திய அரசு இலவசமாக வழங்கும் கரோனா தடுப்பூசியை, தமிழக அரசு சென்னை மண்டலத்துக்கு அதிகமாக ஒதுக்கீடு செய்தும், கோவை மாவட்டத்துக்கு பாகுபாட்டுடன் குறைவாக ஒதுக்கியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

மத்திய அரசு தமிழகத்தின் மேற்கு மண்டல மக்களின் சுய கவுரவத்தை பாதுகாக்கவும், வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும், வளர்ச்சியை ஏற்படுத்தவும் அரசியல் சட்டத்தை பயன்படுத்தி நிர்வாகரீதியாக தமிழகத்தை மாநில சீரமைப்பு செய்து மேற்கு மண்டலத்தை புதிய மாநிலமாக (கொங்குநாடு) உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாநில செயற்குழு உறுப்பினர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிமுக எதிர்ப்பு

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அண்ணா இந்த இயக்கத்தை முதலில் அரசியல் கட்சியாக உருவாக்கியபோதே திராவிட நாடு, திராவிடருக்கே என குரல் கொடுத்தார். சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைவரும் தமிழர்கள் என்கிற உணர்வுடன், நம் நாடு, தமிழ்நாடு என சிந்தித்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். மக்களின் மனதில் கொங்கு நாடு என்கிற பிரிவினை விதைகளை விதைக்க வேண்டாம். யாரையோ சிறுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக, இப்படி ஒரு விஷமத்தனமான சிந்தனையில் இறங்குவது என்பது நாட்டுக்கு நல்லதல்ல. இதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

இந்நிலையில், கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் நிறுவனதலைவர் பெஸ்ட் ராமசாமி கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழகத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 65 சதவீதம் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர், நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இருந்துதான் செல்கிறது. ஆனால், இப்பகுதிகளில் சாலை வசதி, விவசாயத்துக்கு தேவையான வசதி போன்றவை பெரிய அளவில் செய்து தரப்படவில்லை.

கொங்கு பகுதிகள் வளர்ச்சியடைய கொங்குநாடு என்ற தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்