மொழிவாரியாக பிரிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் கொல்லைப்புறமாக பாஜக நுழைய நினைத்தால், அதற்கான எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஏற்கெனவே மாநில உரிமைகளில் பலவற்றை மத்திய அரசு பறித்துள்ள நிலையில், கூட்டுறவுத் துறையை கைப்பற்றும் நோக்கில் மத்திய அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் கொங்கு மண்டலத்தைத் தனியாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்ற பாஜகவினரின் கருத்து ஆபத்தானது. மொழிவாரியாக பிரிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் கொல்லைப்புறமாக பாஜக நுழைய நினைத்தால் அதற்கான எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த விவகாரத்தை அனைத்து அரசியல் கட்சியினரும் ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும்.
கரோனா தடுப்பு நடவடிக்கையில் திமுக அரசின் செயல் பாராட்டுக்குரியது. கரோனா முழுமையாக கட்டுக்குள் வராத வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்தக் கூடாது.
காவிரி-குண்டாறு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தமிழக அரசு அக்கறை காட்ட வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மீது எழும் புகார்களை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடுகள் ஏதுமின்றி நெல் கொள்முதல் செய்வதற்கு தேவையான வசதிகளை தமிழக அரசு செய்துகொடுக்க வேண்டும்.
திமுக அரசு அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். அதே சமயம், ஆட்சிக்கு வந்த 2 மாதங்களிலேயே எல்லாவற்றையும் எதிர்பார்க்க முடியாது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago