தமிழகத்தில் கரோனா தடுப்பூசி மருந்துகளை வீணாக்காமல், கூடுதலாக 2 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி பெரும்பாறையில் மலைவாழ் மக்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை நேற்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள புதிய கரோனா தொற்று சிகிச்சை வார்டை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்துவைத்தார்.
அங்கு நடத்திய ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா 3-வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான 100 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசின் காப்பீட்டுத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தாத 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மருத்துவமனைகளில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில்60 லட்சம் பேருக்கு கரோனாதடுப்பூசி போடப்பட்டன. அப்போது 6 லட்சம் டோஸ்கள் வரை வீணடிக்கப்பட்டன.
தற்போது ஒரு கோடியே 59 லட்சத்து 26 ஆயிரத்து 550 டோஸ்கள் வந்துள்ளன. ஆனால் ஒரு கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 159 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2 லட்சம் பேருக்கு கூடுதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மருந்து குப்பியில் 16 முதல் 24 சதவீதம் வரை கூடுதலாக மருந்து இருக்கும். இதை வீணாக்காமல் முறையாகப் பயன்படுத்தி ஒரு குப்பியில் இருந்து 11 முதல் 12 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது தமிழக சுகாதாரத் துறைக்கு கிடைத்த வெற்றியாகும். மத்திய ஐ.சி.எம்.ஆர். தமிழக சுகாதாரத் துறையை பாராட்டி உள்ளது.
இந்த மாதத்துக்கான மத்திய அரசின் தொகுப்பிலிருந்து 71 லட்சம் தடுப்பூசிகள் வரவேண்டும். ஆனால், இதுவரை 10 லட்சம் வரை வந்துள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் 11 லட்சம் மருந்துகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணி நேரத்தின்போது மருத்துவர்கள் பணியில் இல்லாமல், தங்கள் சொந்த கிளினிக்கில் பணிபுரிவதாக புகார் வந்துள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago