விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கடையம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (47). இவர் 2018-ல் பொன்னங்குப்பத்தை சேர்ந்த பாக்யராஜ் என்பவர் மூலம் அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவின் சகோதரி மகனான சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ரமேஷ்பாபு (45) என்பவருக்கு அறிமுகமானார்.
அப்போது ரமேஷ்பாபு, தன்னுடைய சித்தி சரோஜா மூலமாக அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியிருக்கிறார். இதனை நம்பி குணசேகரன் தனது உறவினர் மற்றும் தெரிந்த 17 பேருக்கு சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி பணியாளர், கிராம உதவியாளர் ஆகிய வேலைகளுக்காக ரமேஷ்பாபு, அவரது முதல் மனைவி சூரிய வர்ஷினி, 2-வது மனைவி ரேவதி, மாமா சவுந்தர்ராஜன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளிலும் நேரடியாகவும் என மொத்தம் ரூ.35 லட்சத்தை கொடுத்துள்ளார்.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்துள்ளார். இதுகுறித்து குணசேகரன், விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, எஸ்பி நாதா உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ரமேஷ்பாபு உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் இரவு டிஎஸ்பி ரவீந்திரன் தலைமையிலான தனிப்படை போலீஸார், ரமேஷ்பாபுவை கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago