பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருக்கிறார். தோல்விக்கு பாஜகவை குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது என்று அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வானூரில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் பேசியதாவது: பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் சிறுபான்மையினரின் வாக்கை நாம் முழுமையாக இழந்து விட்டோம். உதாரணமாக விழுப்புரம் தொகுதியில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்த சிறுபான்மையினருக்கு சுமார் 20 ஆயிரம் வாக்குகள் உள்ளன. அதில்18 ஆயிரம் வாக்குகள் விழுப்புரம் நகரத்தில் இருக்கிறது. விழுப்புரம் நகரத்தில் மட்டும் 16 ஆயிரம் வாக்குகள் குறைந்திருக்கின்றன.
கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு சென்ற காரணத்தினால் மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தது. அதிமுக ஆட்சி வர வேண்டும் என்று வாக்களிக்க தயாராக இருந்தார்கள். ஆனால் கூட்டணி கணக்கு, சிறுபான்மையினர் வாக்கு மற்றும் சில காரணங்களால் நாம் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. இந்த நிலை இல்லாமல் இருந்திருந்தால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது. ஏதோ அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள், மக்கள் அவர்களுக்கு அமோகமாக ஆதரவு தந்து விட்டார்கள் என்று நினைக்க வேண்டாம் என்றார்.
இதற்கிடையே விழுப்புரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில பொதுச் செயலாளர் கே. டி.ராகவன், “சி.வி.சண்முகம் தோற்றதற்கு பாஜகவை குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. உத்தரபிரதேசம், கோவா மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் பாஜகவுக்கு சிறுபான்மை மக்கள் வாக்களித்து உள்ளனர். சிறுபான்மை மக்கள் வாழும் ஜம்மு காஷ்மீரில் 25 எம்பிக்கள் வெற்றி பெற்றுள்ளனர். பாஜகவுக்கு அனைவரும் வாக்களிக்கிறார்கள்.
சட்டப்பேரவைத் தேர்தலின் தோல்விக்கு அதிமுக காரணம்; அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள்தான் காரணம் என்று எங்கள் கட்சி தொண்டர்கள் கூட சொல்ல முடியும்.
சி.வி.சண்முகம் பேசியது அதிமுக தலைமையின் முடிவா என பார்க்க வேண்டும். அரசியல்தெரிந்தவர்கள் இப்படி குற்றம்சாட்ட மாட்டார்கள். இதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கருத்து தெரிவிக்கும்போது பாஜக இதற்கு உரிய பதில் தரும். உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் தேதி அறிவித்தபின்பு மத்திய, மாநில தலைமைமுடிவு எடுக்கும்” என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago