திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
திருவாரூர் மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், செருமங்கலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தார். பின்னர், அன்று இரவு திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கினார். தொடர்ந்து, நேற்று காலை 9.15 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் தெற்கு வீதி வரை நடந்துசென்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பின்னர், ஓடம்போக்கி ஆற்றில் நடைபெற்ற தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார். அதன்பின்பு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று, அங்கு ரூ.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை மையத்தை திறந்துவைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் காட்டூர் ஊராட்சியில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்காக ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணனுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். காட்டூர் ஊராட்சித் தலைவர் விமலாவும் கவுரவிக்கப்பட்டார்.
நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலினுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருக்குறள் எழுதிய பலகையையும், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் வெள்ளிச் செங்கோலையும் நினைவுப் பரிசாக வழங்கினர்.
இதில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எம்எல்ஏக்கள் உதயநிதி ஸ்டாலின், மாரிமுத்து, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப்ராஜ் மற்றும் காவல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
குலதெய்வம் கோயிலில்..
தொடர்ந்து, நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள தனது குலதெய்வ கோயிலான அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு, மனைவி துர்கா ஸ்டாலின், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினருடன் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.சுவாமி தரிசனத்துக்குப் பிறகு, அங்கிருந்து கருணாநிதி பிறந்த இல்லத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நடந்தே சென்றார்.
அங்கு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவரது பெற்றோர் முத்துவேலர், அஞ்சுகத்தம்மாள், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் ஆகியோரின் சிலைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். பின்னர், இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் அரசியல், சினிமா சார்ந்த புகைப்படங்களை பார்வையிட்டு, குறிப்பேட்டில் கையெழுத்திட்டார்.
தொடர்ந்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் மற்றும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்வில், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்எல்ஏக்கள் நாகை மாலி, முகம்மது ஷா நவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago