திருப்பூர் அருகே பெருமாநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி குழந்தை நகரைச் சேர்ந்தவர் கோபி கண்ணன் (38). கேரளாவில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். கரோனா ஊரடங்கு காரணமாக ஊருக்கு வந்தவர், நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் சேலத்தில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு சென்றுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கருக்கன்காட்டுபுதூர் தேசியநெடுஞ்சாலையில் பாலத்தின் மீது வந்தபோது, நிலை தடுமாறி அங்கிருந்த தடுப்புச்சுவர் மீதுமோதியதில், இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதில், சம்பவ இடத்திலேயே கோபி கண்ணன் உயிரிழந்தார்.
இந்நிலையில், பெருமாநல்லூர் அருகே காளிபாளையத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர், பனியன் நிறுவனத்தில் வேலையை முடித்துவிட்டு நள்ளிரவு வீடு திரும்பியுள்ளனர். சாலையில் வாகனம் கிடப்பதை பார்க்காமல் அதிவேகமாக வந்து அதன் மீது மோதியதில் இருவரும் உயிர்இழந்தனர்.
இதுதொடர்பாக அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின்பேரில் பெருமாநல்லூர் போலீஸார் சென்று, 3 பேரின் உடல்களையும் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்த இருவரும் தமிழ்ச்செல்வன் (22), சந்தோஷ்குமார் (20) என்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago