மத்திய அரசு சார்பில் வீர தீர செயல்களில் ஈடுபடும் போலீஸாருக்கு வழங்கும், பிரதம மந்திரியின் உயிர் காக்கும் காவலர் விருதுக்கு தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதல்நிலை காவலர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த தென்னமநாடு மேலதெருவைச் சேர்ந்தவர் எஸ்.ராஜ்கண்ணன்(35). இவர் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். 2015-ல் தஞ்சாவூர் ஆத்துபாலம் அருகே கல்லணை கால்வாயில் விழுந்த சிறுவனை போராடி உயிருடன் மீட்டார்.
இந்நிலையில், 2018-ம் ஆண்டுக்கான பிரதம மந்திரியின் உயிர்காக்கும் காவலர் விருதுக்கு நாடு முழுவதும் 14 பேர் அண்மையில் தேர்வு செய்யப்பட்டனர். இதில், தமிழகத்தில் இருந்து ராஜ்கண்ணனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து சக போலீஸார் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ராஜ்கண்ணனின் மனைவி சரண்யா, ஒரத்தநாடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். திவான்(5), தீரன்(2) என 2 மகன்கள் உள்ளனர். இதுகுறித்து ராஜ்கண்ணன் கூறும்போது, விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது பெருமையாக உள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago