விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள திமுக, அதிமுக நிர்வாகிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் தமிழகத்திலுள்ள 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியேற்றுள்ளனர். ஆனால், புதிய மாவட்டங்கள் உதயமானதால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தொகுதி வரையறைப் பணிகள் காரணமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்தத் தேர்தலை வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என அண்மையில் உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருப்பதால், தேர்தலை எதிர்கொள்ள திமுக மற்றும் அதிமுக தலைமை ஆயத்தமாக உள்ளன. ஆனால் ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள திமுக, அதிமுக நிர்வாகிகள் மத்தியில் தயக்கம் நிலவுகிறது.
இதுகுறித்து திமுக பிரமுகர்கள் கூறியது: 28 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்து ஒன்றரை ஆண்டுகள் முடிந்து விட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால், வெற்றிபெறுபவர்களுக்கான பதவிக் காலம் எத்தனை ஆண்டுகள் என்ற கேள்வி முன் நிற்கிறது. இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளா அல்லது 3 ஆண்டுகளா என்பது குறித்த குழப்பம் நீடிக்கிறது.
ஏற்கெனவே 28 மாவட்டங்களில் நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலின் படி கணக்கில் கொண்டால் 3 ஆண்டுகள் தான் பதவியில் நீடிக்க முடியும் என்ற நிலை உள்ளது. அப்படி 3 ஆண்டுகள் தான் பதவியில் இருக்கமுடியும் என்றால் சட்டப் பேரவையில், பதவி கால குறைப்புக்கான மசோதா தாக்கல் செய்யப்படவேண்டும். இவை எல்லாம் நிர்வாக ரீதியான சிக்கல்கள்.
அதேநேரத்தில் போட்டியிடும் எங்களுக்கு பொருளாதாரரீதியான பிரச்சினை உள்ளது. 3 ஆண்டுகளுக்காக இவ்வளவு செலவு செய்வதா என்ற கேள்வி எழுவதில் நியாயம் உண்டு. இது திமுகவுக்கு மட்டுமல்ல அதிமுகவுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கூட்டணிக் கட்சிகளின் குழப்பம் வேறு” எனத் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago