முன்னாள் அமைச்சர் - அய்யாறு வாண்டையார் மறைவு :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பூண்டி கி.அய்யாறு வாண்டையார் (86) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார்.

காங்கிரஸ் கட்சியில் முக்கிய பிரமுகராக இருந்த அய்யாறு வாண்டையார், தஞ்சாவூர் பேரவை தொகுதியில் 1984-ல் நடந்த இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றார்.

பின்னர், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்த அவர், 2001-ல் திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது, சில நாட்கள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். தஞ்சாவூரில் பல்வேறு அமைப்புகளில் கவுரவ பொறுப்பிலும் இருந்தவர்.

இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருமாதமாக சிகிச்சை பெற்று வந்த அய்யாறு வாண்டையார் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

இதையடுத்து, தஞ்சாவூருக்கு கொண்டுவரப்பட்ட இவரது உடலுக்கு பூண்டி கிராமத்தில் நேற்று மாலை இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. இவரது மனைவி ராஜலட்சுமி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். மகன் தனசேகர வாண்டையார், மகள் பொன்னம்மாள் உள்ளனர். அண்மையில் மறைந்த பூண்டி  புஷ்பம் கல்லூரி முன்னாள் செயலர்- தாளாளரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான கி.துளசிஅய்யா வாண்டையாரின் இளைய சகோதரர் அய்யாறு வாண்டையார்.

தலைவர்கள் இரங்கல்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "முன்னாள் அமைச்சர், பெரியவர் கி.அய்யாறு வாண்டையார் காலமான செய்தியறிந்து வருத்தமடைந்தேன். காவிரி டெல்டாவின் புகழ்மிக்க குடும்பத்தில் பிறந்து மக்கள் பணியில் ஈடுபட்ட அன்னாரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்