ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு : மன்னார்குடி அருகே நெல்விதை தெளித்த வயல் சேதமடைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் ஒன்றியம் பனையூர், கோமளப்பேட்டை, கீழமருதூர் ஆகிய பகுதிகளில், ஓஎன்ஜிசி மூலம் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு, நல்லூர் கிராமத்தில் ஒன்றிணைக்கப்பட்டு, பின்னர் நரிமணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு, விளைநிலங்களின் வழியாக குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், பனையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் வயல் வழியாகச் செல்லும் கச்சா எண்ணெய் குழாயில் நேற்று எதிர்பாராதவிதமாக உடைப்பு ஏற்பட்டது. இதில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் பரவியதால், நெல் தெளிப்பு வயல் சேதமடைந்தது. திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து, மன்னார்குடி கோட்டாட்சியர் அழகர்சாமி மற்றும் ஓஎன்ஜிசி அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர், உடைப்பு எடுத்த குழாய்க்குப் பதிலாக மாற்றுக் குழாய் பொருத்தப்பட்டு, எண்ணெய் கசிவு தடுத்து சீரமைக்கப்பட்டது.

இதுகுறித்து விவசாயி சிவக்குமார் கூறியதாவது: தற்போது, குறுவை சாகுபடிக்காக நேரடி நெல் தெளிப்பு செய்துள்ளேன். குழாயில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறிய கச்சா எண்ணெய் பரவியதால், வயல் நாசமாகிவிட்டது. இதை சரிசெய்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர ஓரிரு ஆண்டுகள் ஆகிவிடும். எனவே, இந்த உடைப்பை நிரந்தரமாக சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதுடன் ரூ.10 லட்சம் இழப்பீடும் தர வேண்டும் என்றார்.

பேச்சுவார்த்தையில் முடிவு

தொடர்ந்து, இதுதொடர்பாக மேலப்பனையூரில் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் , விவசாயி சிவக்குமாருக்கு ஓஎன்ஜிசி சார்பில் ரூ.1.75 லட்சம் இழப்பீடு வழங்குவது, அந்த நிலத்தில் மீண்டும் விவசாயம் செய்ய ஏற்றவகையில் நிலத்தைப் பண்படுத்திக்கொடுப்பது, இதற்காக கச்சா எண்ணெய் படர்ந்த பரப்பில் உள்ள மண்ணை அகற்றிவிட்டு, விவசாயி சுட்டிக்காட்டும் இடத்தில் இருந்து மண்ணை வெட்டிக்கொண்டு வந்து பயன்படுத்துவது என முடிவானது .

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்