ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்காக விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக அலுவலக பகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து கூறியது:
கடந்த ஆண்டு பிப்.25-ம் தேதி திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2-ஆக பிரிக்கப்பட்டு ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு, துணைவேந்தரும் நியமிக்கப்பட்டார். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் வரையறுக்கப்பட்ட எல்லைகளாகும்.
தற்போது திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டத்தினர் உயர்கல்வி பயில திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 3 மாவட்டங்களுக்கு என தனியே ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கியிருக்கும்போது, அதை முடக்கும் வகையில் உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திகேயன் இவ்வாறு உத்தரவிட்டு உள்ளார். இச்செயலை செய்வது இந்த அரசு அல்ல, உயர் கல்வித் துறைச் செயலர் கார்த்திகேயன்தான்.
உயர்கல்வி துறை அமைச்சராக உள்ள பொன்முடி, விழுப்புரத்தைச் சேர்ந்தவர். முதல்வர், அமைச்சருக்குத் தெரியாமல் நடந்து இருந்தால் இதனை சீர் செய்ய வேண்டும்.
இங்குள்ள துணைவேந்தருக்கு வாகனம்கூட கொடுக்கப்படவில்லை. பதிவாளர் நியமனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இதனை அரசியலாக்க விரும்பவில்லை. அதே நேரத்தில், இதன்மேல் நடவடிக்கை தாமதமானால், இது இப்படித்தான் தொடரும் என்றால் நாங்கள் மேல் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago