தமிழகத்தில் கரோனா 2-வது அலையில் ஒரே மாதத்தில் மட்டும் காவல்துறையில் 47 பேர் உயிர்இழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் அதிகமாக உயிரிழந்திருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
கரோனா தடுப்பு பணியில் காவல்துறையினரும் முன்களத்தில் நின்று பணிபுரிகின்றனர். இவர்களில் கரோனா பாதிப்புக்குள்ளாகி உயிர்இழப்பது அதிகரித்து வருகிறது. உயிரிழப்பைத் தடுக்க முதல் அலையில் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டன. ஓய்வு வயதை நெருங்கும், சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட இணை நோய் பாதிப்பில் இருக்கும் காவல் துறையினருக்கு கரோனா தடுப்பு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மொத்த காவல் துறையினரின் எண்ணிக்கையின் அடிப்படையில் 3 சுழற்சியில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முகக்கவசம், சானிடைசர் போன்ற தடுப்பு உபகரணங்களும் வழங்கி பாதிப்பு, உயிரிழப்பை தடுக்க காவல் துறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும், 2-வது அலையில் ஓரிரு மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் இணை நோய் பாதிப்பில் இருக்கும் காவல் துறையினருக்குச் சலுகை வழங்கப்படவில்லை. 2-வது அலையில் தொற்று பாதிப்பு காவல் துறையினரையும் விட்டுவைக்கவில்லை.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: காவல்துறையில் ஒரே மாதத்தில் (மே 1 முதல் 31 வரை) மட்டும் 83 பேர் இறந்துள்ளனர். இதில், கரோனாவுக்கு மட்டுமே 47 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக 1988, 1993,1994, 1997-98-களில் பணியில் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மட்டும் 29 பேர் மரணமடைந்துள்ளனர். பிற நோய் பாதிப்பால் உயிரிழந்த 18 பேரில் 12 பேரும், மாரடைப்பால் உயிரிழந்த 7 பேரில் 4 பேரும், விபத்துகளில் மரணமடைந்த 6 பேரில் ஒருவரும் என சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உயிரிழந்துள்ளனர். புற்று நோயால் ஒருவரும், 4 பேர் தற்கொலையும், சந்தேக மரணத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
கரோனா மற்றும் பிற நோய் பாதிப்புகளில் உயிழந்தோரைப் பார்க்கும்போது, 55 வயதை கடந்த, ஓய்வு நாளை எட்டிய மற்றும் இணை நோய் பாதிப்புக்குள்ளான சிறப்பு உதவி ஆய்வாளர்களே அதிகமாக உள்ளனர். 58 வயதில் பணி ஓய்வு பெற்று அதில் வரும் பணப் பலன்களைக் கொண்டு வீட்டுக்கடன் அடைத்தல், பிள்ளைகளுக்குத் திருமணம் என்ற எதிர்கால திட்டத்துடன் காத்திருந்தோருக்கு 2 ஆண்டு பணி நீடிப்புவழங்கப்பட்டது. இதனால், ஓய்வின்றிப் பணியைத் தொடந்ததால் சிலர் கரோனா உள்ளிட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இவர்களின் வாரிசுகளுக்கு பணி வாய்ப்பு ஒருபுறம் இருந்தாலும், காவல்துறையில் உயிரிழப்பு மூலம் எண்ணிக்கை குறைவதோடு, ஏற்கெனவே பணியில் இருப்போருக்கு பதவி உயர்வு, இளைஞர்களுக்கு வாய்ப்புக் கிடைக்காத சூழலும் உருவாகி இருக்கிறது.
டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயரதிகாரிகள் இதை பரிசீலித்து, உரிய நேரத்தில் பணி ஓய்வு தந்து காவலர்கள் உயிரிழப்பைத் தடுக்க வேண்டும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago