நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாக திமுக பொய்யான வாக்குறுதி : பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று தெரிந்திருந்தும் தேர்தலின்போது திமுக பொய்யான வாக்குறுதியை அளித்துள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் குற்றஞ்சாட்டினார்.

காஞ்சிபுரத்தில் கரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரம் இழந்த மாற்றுத் திறனாளிகள், முன்கள பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் நலிவடைந்த கட்சியினர் ஆகியோருக்கு காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் வையாவூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநரின் உரை பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினை போற்றுவதற்காகவே தயாரிக்கப்பட்டதுபோல் ஆளுநர் உரை உள்ளது.

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000, பெட்ரோல் விலை ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய எந்த வாக்குறுதியும் ஆளுநர் உரையில் இல்லை.

மேலும், நீட் தேர்வை ரத்துசெய்ய முடியாது என்று தெரிந்துஇருந்தும் தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதியை அளித்துள்ளது. மாணவர்களின் மன உறுதியைகெடுக்கும் செயலில் திமுக ஈடுபட்டுள்ளது. நீட் தேர்வு குறித்தும் ஆளுநர் உரையில் ஏதும் இடம் பெறவில்லை.

தற்போதுள்ள எங்கள் கூட்டணி தொடருகிறது. விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை சந்திக்க பாஜக தயாராக உள்ளது. மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2013-ம் ஆண்டு தடை விதித்தது. இதற்காக மத்திய அரசு பல நூறு கோடி ரூபாய் ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்