சிவகங்கையில் மேலூர் சாலையில் ஆக்கிரமிக்கப்பட்ட கவுரி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள 9.58 ஏக்கர் நிலத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் மீட்டனர். இந்த நிலத்தை முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரனின் உறவினர்கள் ஆக்கிரமித்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த நிலத்தை அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் நேற்று பார்த்தனர். பின்னர் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறியது:
கவுரி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 142 ஏக்கர் நிலத்தை அரசின் ஆவணங்களைத் திருத்தி பலர் ஆக்கிரமித்துள்ளனர். சரவணன் என்பவர் பெயரில் 9.58 ஏக்கர் நிலம் அண்மையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. முதல்வர் உத்தரவின் பேரில் இந்த இடம் மீட்கப்பட்டு உள்ளது.
இதேபோல் ஆக்கிரமிப்பில் உள்ள மற்ற இடங்களும் போர்க்கால அடிப்படையில் மீட்கப்படும். கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆக்கிரமித்த இடத்தை ஒப்படைக்க முன்னாள் அமைச்சர் தரப்பினர் ஒத்துழைக்க வேண்டும். இதை நாங்கள் அரசியலாக்க நினைக்கவில்லை. முன்னாள் அமைச்சர் தரப்பினர் இந்த இடம் தொடர்பாக யார், யாரிடம் பேசினர் என்ற ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் அதை வெளியிடுவோம்.
1 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக ஹெச்.ராஜா கூறியுள்ளார். அந்த பட்டியலை வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago