தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் - கல்லணை புனரமைப்பு, வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ளஆறு, வாய்க்காலில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணை இன்று (ஜூன் 12) தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் ரூ.65.10 கோடி மதிப்பீட்டில் 647 பணிகள் மூலம் 4,061 கி.மீ தொலைவுக்கு தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் முன்பாக, தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு தனி விமானத்தில் வந்தார்.

கல்லணையில் ஆய்வு

பின்னர், திருச்சியில் இருந்து கார் மூலம் கல்லணைக்கு வந்த முதல்வர், கல்லணையில் காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளின் தலைப்பு பகுதிகளில் நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின்கீழ் ரூ.122 கோடியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளதை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் நடைபெற்றபணிகளின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். அவரிடம் நீர்ப்பாசனத் துறை கூடுதல் செயலர் சந்தீப் சக்சேனா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலர் கே.கோபால், சிறப்பு தூர்வாரும் பணிகளுக்கான கண்காணிப்பு அலுவலர் பிரதீப்யாதவ், தஞ்சாவூர் ஆட்சியர் ம.கோவிந்தராவ் ஆகியோர் இப்பணிகள் குறித்து விளக்கினர்.

ஆய்வுக் கூட்டம்

தொடர்ந்து, கல்லணை ஆய்வு மாளிகையில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எஸ்.எஸ்.சிவசங்கர், சிவ.வீ.மெய்யநாதன், அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், எம்பிக்கள், எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், திருச்சி என்.சிவா, சு.திருநாவுக்கரசர், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிஆர்பி.ராஜா மற்றும் பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இதுவரை நடந்துள்ள பணிகள், தற்போது நடைபெறும் பணிகளின் தன்மைகள் குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் எடுத்துக் கூறினர்.

தூர்வாரும் பணிகள் ஆய்வு

அதைத் தொடர்ந்து, வல்லம் அருகே உள்ள முதலைமுத்து வாரி ரூ.40 லட்சத்திலும், தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் வெண்ணாறு ரூ.17 லட்சத்திலும் தூர் வாரப்பட்டுள்ளதை முதல்வர் பார்வையிட்டார்.

இந்த இடங்களில் எம்பிக்கள் செ.ராமலிங்கம், சண்முகம், எம்எல்ஏக்கள் டிகேஜி.நீலமேகம், சாக்கோட்டை அன்பழகன், க.அண்ணாதுரை, என்.அசோக்குமார், பூண்டி கலைவாணன், நிவேதா முருகன், ஜவாஹிருல்லா, ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்டோர் முதல்வரை வரவேற்றனர்.

கொடிங்கால் வாய்க்காலில்...

அதன் பின்னர், திருச்சி மாவட்டம் கொடிங்கால் வாய்க்காலில் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, ஆட்சியர் சு.சிவராசு, எம்எல்ஏக்கள் அ.சவுந்தரபாண்டியன், எஸ்.ஸ்டாலின் குமார், எம்.பழனியாண்டி, எஸ்.இனிகோ இருதயராஜ், எஸ்.கதிரவன் மற்றும் நீர்வள ஆதாரத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி, நடுக்காவிரி வடிநிலவட்ட கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.திருவேட்டைசெல்லம், திருச்சி ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டச் செயற்பொறியாளர் ஆர்.மணிமோகன், முக்கொம்பு உதவிப் பொறியாளர் ராஜரத்தினம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முதல்வர் வருகையையொட்டி, மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்