ஆம்புலன்ஸ் மரத்தில் மோதிய விபத்தில் கர்ப்பிணி உட்பட - ஒரே குடும்பத்தில் 3 பெண்கள் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி அருகே நேற்று அதிகாலை சாலையோர மரத்தின் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் நிறைமாத கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ஜெயலட்சுமி (23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அருகில் உள்ள புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து அவரது மாமியார் செல்வி (52). செல்வியின் மகள் அம்பிகா (33) ஆகிய இருவரும் ஜெயலட்சுமியை அழைத்துக் கொண்டு நேற்று அதிகாலை 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்களுடன் புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மீனா, ஆம்புலன்ஸ் உதவியாளர் மூங்கில்துறைப்பட்டு தேன்மொழி(27) ஆகியோரும் சென்றுள்ளனர்.

ஆலத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜெயலட்சுமி, செல்வி, அம்பிகா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த சங்கராபுரத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கலியமூர்த்தி (36), மீனா, தேன்மொழி ஆகிய 3 பேரும் கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் செவிலியர் மீனா கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

நிறை மாத கர்ப்பிணி உட்பட 3 பெண்கள் ஒரே குடும்பத்தில் உயிரிழந்திருப்பது புதுப்பட்டு கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜெயலட்சுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம், செல்வி, அம்பிகா குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சமும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்த மூவருக்கும் காப்பீட்டு திட்டத்தின்கீழ் சேர வேண்டிய பலன்களை பெற்று வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE