‘சசிகலாவை விமர்சித்ததால் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது; எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்புவிழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், “கருவாடு கூட மீன் ஆகலாம்; ஆனால் ஒரு நாளும் சசிகலா அதிமுக உறுப்பினராக கூட முடியாது” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே சி.வி.சண்முகம் நேற்று திண்டிவனம் ரோஷணை காவல் நிலையத்தில் ஆய்வாளர் வள்ளியிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 7-ம் தேதி சசிகலா குறித்து ஊடகங்களில் சில கருத்துகளை தெரிவித்தேன். அதற்குசசிகலா நேரடியாக பதிலளிக்காமல் தன் அடியாட்களை வைத்துகைபேசி மற்றும் சமூக ஊடகங்களான வாட்ஸ் அப், ஃபேஸ்புக்,ட்விட்டர் மூலம் ஆபாசமாக, அநாகரிகமாக பேசி, பதிவிட்டு வருகிறார். கைபேசி வழியாக என்னை அச்சுறுத்தும் வகையில் கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர். இன்று வரை சுமார் 500 போன்கள் (அழைப்புகள்) செய்துள்ளனர். இன்னமும் கைபேசி, சமூக ஊடகங்கள் மூலம் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
மேலும், ‘சசிகலா பற்றி பேசினால் உன்னையும், உன் குடும்பத்தையும் தொலைத்துவிடுவோம்’ என மிரட்டும் தொனியில் பேசி வருகின்றனர். சசிகலாவின் தூண்டுதலே இதற்கு காரணம். எனக்குகொலை மிரட்டல் விடுக்கவும், ஆபாசமாகவும் பேச காரணமாக இருந்த சசிகலா மீதும், என் கைப்பேசிக்கு வந்த அழைப்புகளில் பேசிய மர்ம நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago