தமிழகத்தில் முதல்முறையாக யானைகள் குறித்த விழிப்புணர்வு மையம் கோவையில் உருவாக்கப்பட்டுள்ளது.
வனத்தை பாதுகாப்பதிலும், வன வளத்தைப் பெருக்குவதிலும் யானைகளின் பங்குகுறிப்பிடத்தக்கது. யானைகள் குறித்த பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்வதற்கான பிரத்யேக மையம் தமிழகத்தில் இல்லை என்ற குறைபாடு இருந்து வந்தது.
இந்நிலையில், கோவை -மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில், வனத் துறை மரக்கிடங்கு வளாகத்தில், ‘வேழம் இயலியல்’ விழிப்புணர்வு மையம் உருவாக்கப்பட்டு உள்ளது. இம்மையத்தில் பல்வேறு இன யானைகளின் விவரங்கள் தொகுக்கப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இயற்கைக்கும் யானைக்குமான தொடர்பு, மனிதனுக்கும் யானைக்குமான தொடர்பு, மனிதர்களால் யானைகளுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், யானைகளை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பன குறித்த விளக்கங்கள இங்கு இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஐ.அன்வர்தீன் கூறியதாவது:
யானைக்கு, தமிழில் உள்ள பெயர்களில் ஒன்றான‘வேழம்’ என்ற பெயரில் இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மையம், அறிவியல் சார்ந்த பொழுபோக்கு இடமாகவும், பள்ளிக் குழந்தைகள் கண்டுகளிக்கும் முக்கிய இடமாகவும் இருக்கும். இம்மையத்துக்கு வெளியே பட்டாம்பூச்சி பூங்காவும் அமைய உள்ளது.
மையத்தின் உள்ளரங்கப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. வெளியில் பூங்கா அமைக்கும் பணிகள் நிறைவடைய இன்னும் 3 மாதங்களாகும். கிராம வனக் குழுக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கோவை மாவட்டவன வளர்ச்சி முகமை சார்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கோவையில் உள்ள சூழல்சுற்றுலாக் குழுக்கள், தங்கள்வருவாயில் இருந்து இம்மையத்தை உருவாக்கத் தேவையான நிதியை அளித்துள்ளன. அனைத்துப் பணிகளும் முழுமை பெற்றவுடன்,பொதுமக்கள் பார்வைக்கு இம்மையம் திறக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆலோசகர் சிரில் உள்ளிட்டோர் இம்மையத்தின் வடிவமைப்பில் உதவி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago